கடந்த வாரம் கோவை மாநகரத்தில் லேசாக மழைப்பொழிவு இருந்த நிலையில் இந்த வாரம் (31.8.26 முதல் 5.9.26 வரை) திடீரென வெயில் சற்று உயர்வாக இருப்பதாக மக்கள் உணருகின்றனர்.

இதற்கு என்ன காரணம்? இந்த வாரம் வானிலை எப்படி இருக்கும் என கோவையை சேர்ந்த வானிலை ஆய்வாளர் சுஜய்-யிடம் கேட்டதற்கு, அவர் கூறியது:-

இந்த வாரம் கோவை மாநகரத்தில் ஆங்காங்கே வெப்ப சலன மழையை எதிர்பார்க்கலாம். அதேபோல கோவையின் வடக்கு பகுதியிலும் மிதமான மழையை எதிர்பார்க்கலாம். வெப்பம் 33° செல்ஸியஸ் முதல் 34° செல்ஸியஸ் வரை இருக்கக்கூடும்.

நாம் இப்போது சூப்பர் எல் நினோ எனும் காலநிலை மாற்ற காலத்தில் இருக்கிறோம். இதனால் தான் கோவையில் வெயில் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருப்பதாக தெரிகிறது. தமிழகத்தின் உள்மாவட்டங்களிலும், பிற மாவட்டங்களிலும் கடந்த 2-3 மாதங்கள் வெயில் அதிகமாக இருப்பதாக உணரப்படுவதற்கும் இதுவே காரணம்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லாமல் போவதற்கும் சூப்பர் எல் நினோ முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்த சூப்பர் எல் நினோ காலம் 2027 மார்ச், ஏப்ரல் காலத்தில் முடிவு பெற்றாலும் அதன் தாக்கம் 2027 கோடை காலம் வரை நீடிக்கும். இதனால் வரும் கோடைகாலம் 2024ல் இருந்ததது போல உஷ்ணம் மிகுந்த ஒன்றாக இருக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.