இந்தியாவில் சர்க்கரை விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கரும்பு உற்பத்தி குறைவு, தண்ணீர் பற்றாக்குறை, பண்டிகைக் கால தேவை அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் சர்க்கரை விலை உயர்ந்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாடு முழுவதும் சுமார் 5 கோடி ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி நடைபெறுவது வழக்கம். ஆனால், பல மாநிலங்களில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையால் கரும்பு சாகுபடி பரப்பு குறைந்து வருகிறது. இதன் தாக்கம் சர்க்கரை உற்பத்தியிலும் எதிரொலித்துள்ளது.
தமிழக சர்க்கரை ஆலைகளுக்கு தேவையான கரும்பை அண்டை மாநிலங்களில் இருந்து பெற வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் உற்பத்திச் செலவு அதிகரித்து, சந்தை விலையிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனிடையே ஓணம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால் சர்க்கரைக்கான தேவை மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. தேவை அதிகரிப்பை பயன்படுத்தி சில மொத்த வியாபாரிகள் சர்க்கரையை பதுக்கி வைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த சில வாரங்களில் சர்க்கரை விலையில் ஏற்பட்ட உயர்வு கவனம் பெற்றுள்ளது. சென்னையில் ஒரு கிலோ சர்க்கரை ரூ.47-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது பல இடங்களில் ரூ.70 முதல் ரூ.75 வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 50 கிலோ எடை கொண்ட சர்க்கரை மூட்டையின் விலையும் கடந்த வாரம் ரூ.2,250-ல் இருந்து தற்போது ரூ.3,600 ஆக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சர்க்கரை விலை உயர்வுக்கு இ-20 பெட்ரோல் தயாரிப்பில் கரும்பு பயன்பாடு காரணமாக இருப்பதாக சில வியாபாரிகள் கூறுகின்றனர். ஆனால், சர்க்கரை விலை உயர்வுக்கும் இ-20 பெட்ரோல் விற்பனைக்கும் நேரடி தொடர்பு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சர்க்கரை விலை உயர்வின் தாக்கம் தேநீர், காபி உள்ளிட்ட அன்றாட உணவுப் பொருட்களிலும் எதிரொலிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கனவே எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு உள்ளிட்ட செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், சர்க்கரை விலையும் உயர்ந்திருப்பதால் தேநீர் கடை உரிமையாளர்கள் விலை உயர்வை பரிசீலித்து வருகின்றனர்.
இதனால் ஒரு டீ அல்லது காபியின் விலை மேலும் ரூ.20 முதல் ரூ.25 வரை உயரக்கூடும் என்ற தகவல் பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சர்க்கரை விலை உயர்வால் பால்கோவா உள்ளிட்ட இனிப்புப் பொருட்களின் விலையும் அதிகரித்துள்ளது. பால்கோவா விலை கிலோவுக்கு சுமார் ரூ.80 வரை உயர்ந்து, தற்போது ஒரு கிலோ ரூ.400 வரை விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
வரும் பண்டிகைக் காலத்தில் சர்க்கரையின் தேவை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், விலை உயர்வை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
