கோவை மாநகராட்சிப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தெரு நாய்களின் தொல்லையால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் சைக்கிளில் சென்றவர்களை தெரு நாய்கள் துரத்தும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, சுந்தராபுரம், மதுக்கரை சாலை அஷ்ட லட்சுமி நகர் பகுதியில் நேற்று மாலை நபர் ஒருவர் தனது சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு கூட்டமாக நின்று இருந்த தெரு நாய்கள் திடீரென ஆக்ரோஷமாகக் குரைத்தவாறு அவரை நோக்கிப் பாய்ந்து கடிக்கத் துரத்தின.

​நாய்களிடம் கடிபடாமல் இருக்க, அவர் சைக்கிளை வேகமாகக் மிதித்துத் தப்பிச் செல்லும் காட்சிகள், அப்பகுதியில் உள்ள சிசிடிவி.யில் பதிவாகி உள்ளன. இதே பகுதியில் நாய் துரத்தியதால் 8 வயது சிறுமி ஒருவர் கூச்சலிட்டபடி சைக்கிளில் தப்பிச் சென்ற மற்றொரு சம்பவமும் அரங்கேறி உள்ளது.

இது குறித்துச் சமூக ஆர்வலர் நூர் அகமது கூறுகையில்: அஷ்டலட்சுமி நகரில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு வெளியே ஓடி வந்தேன். அப்போது 8 வயது மதிக்கத்தக்கச் சிறுமி ஒருவரைத் தெருநாய்கள் கூட்டமாகத் துரத்தி உள்ளன. அந்தப் பயத்தில் சிறுமி சைக்கிளில் வேகமாகத் தப்பிச் சென்றுள்ளார். நல்லவேளையாக எதிரே வேறு எந்த வாகனங்களும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டு சிறுமி உயிர் தப்பினார் எனக் கூறினார்.

கோவை மாநகரில் தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் நூர் அகமது நேரில் மனு ஒன்றை அளித்துள்ளார்.​ அதில், “பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் தெருநாய்களைக் கட்டுப்படுத்த மாநகராட்சி உடனடியாகக் களமிறங்க வேண்டும். மேலும், பொதுமக்கள் வளர்ப்பு நாய்களை வெளியே அழைத்து வரும்போது அவற்றுக்குக் கட்டாயம் வாய்க்கவசம் அணிய வேண்டும்; மீறினால் கடும் அபராதம் விதிக்கப்பட வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.