கோவை மாநகராட்சி மூலம் சுமார் 47,000 தெரு நாய்களுக்கு, கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி செய்திக்குறிப்பில், தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், 2030-ஆம் ஆண்டுக்குள் வெறிநோய் இல்லாத கோவை என்ற இலக்கை அடையவும், மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கான விலங்கினப் பிறப்பு கட்டுப்பாடு திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. கால்நடை மருத்துவர்கள் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அறுவை சிகிச்சை மையத்தில் நடைபெற்று வரும் பணிகளை மாநகராட்சியின் கால்நடை மருத்துவ அலுவலர், நேரில் ஆய்வு செய்து, அறுவை சிகிச்சை நடைமுறைகள் மற்றும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டு வரும் பராமரிப்பு பணிகளை பார்வையிடுகிறார்.
மாநகராட்சி பகுதியில் சுமார் 1,11,074 தெரு நாய்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில், இதுவரை மாநகராட்சியின் தெரு நாய்களுக்கான விலங்கினப் பிறப்பு கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் சுமார் 47,000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும், தெரு நாய்களுக்கு முறையான வெறிநோய் தடுப்பூசி செலுத்துதல் மற்றும் பிற வெறிநோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
