ஆந்திரப் பிரதேசத்தின் ரூ.1,700 கோடி குப்பம் விமான நிலையத் திட்டம் தமிழகத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மிகப் பெரிய எச்சரிக்கை மணி என இந்திய தொழில்முனைவோர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இந்திய தொழில்முனைவோர் சங்கத்தின் தேசிய தலைவர் ரகுநாதன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் பரந்தூர் விமான நிலைய திட்டம் ஏற்கனவே பறிபோனது. இத்திட்டம் ரத்து செய்யப்பட்டதால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு சாதாரணமானதல்ல. இத்தகைய சூழலில் தற்போது ஓசூர் விமான நிலைய திட்டத்திற்கும் ஆபத்தான சூழல் உருவாகியுள்ளது.

ஓசூரிலிருந்து சுமார் 130 கி.மீ. தொலைவில் ஆந்திர மாநிலத்தில் குப்பம் விமான நிலையம் உருவாக உள்ளது. அங்கு அத்திட்டம் நடைமுறைக்கு வந்தால் ஓசூர் விமான நிலையத் திட்டத்தின் முக்கியத்துவமும் முதலீட்டு வாய்ப்புகளும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் ஓசூர், கிருஷ்ணகிரி பகுதி மிகப்பெரிய தொழில் மையமாக உருவெடுத்து வருகிறது. விமானப் போக்குவரத்து மற்றும் சரக்குப் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்பார்க்க முடியாது.

ஆந்திரா புதிய உள்கட்டமைப்புகளை வேகமாக உருவாக்கி முதலீடுகளை ஈர்த்து வருகிறது. தமிழகமோ இன்னும் பல திட்டங்களுக்கு அனுமதி வழங்குவதில் காலதாமதம் செய்து வருகிறது. விமான எரிபொருள் மீதான வரியைக் குறைத்திருப்பது வரவேற்கத்தக்க வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை. ஆனால் வரிச் சலுகைகள் மட்டும் போதாது. அதற்குத் தேவையான உள்கட்டமைப்பும் அவசியம்.

தமிழகத்தின் தொழில் வளர்ச்சிக்கு ஓசூர் விமான நிலையத்திற்கான தடைகளை உடனடியாக நீக்குதல், மத்திய அரசுடன் அவசர ஆலோசனை நடத்துதல், காலக்கெடுவுடன் கூடிய தெளிவான செயல்திட்டத்தை அறிவித்தல், ஓசூர் –கிருஷ்ணகிரி தொழில் வளர்ச்சி மற்றும் எதிர்கால முதலீடுகளை பாதுகாத்தல் போன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டியது மிக அவசியம்.

பரந்தூர் நமக்குப் பாடமாக இருக்கட்டும். ஓசூர் மற்றொரு தவறவிட்ட வாய்ப்பாக மாறிவிடக் கூடாது. முதலீட்டாளர்கள் நமக்காகக் காத்திருக்க மாட்டார்கள். வேகமான அனுமதிகளையும் சிறந்த உள்கட்டமைப்பையும் வழங்கும் மாநிலங்களை நோக்கிச் சென்றுவிடுவார்கள். தமிழக அரசு இப்போதே விழித்துக்கொண்டு செயல்பட வேண்டும். மற்றொரு  மிகப்பெரிய தொழில் வாய்ப்பை நாம் இழக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.