உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி வர உள்ள நிலையில் மாநகராட்சியில் செய்ய வேண்டிய அடிப்படை தேவைகளை வேண்டுமென்றே தவெக அரசு செய்யாமல், மாமன்றத்தில் அதிகமாக உள்ள திமுக கவுன்சிலர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கிறார்கள் என முன்னாள் திமுக எம்.எல்.ஏ., நா.கார்த்தி கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கோவை மாநகராட்சியில் மழைநீர் வடிகால் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தேக்கமடைந்துள்ளதாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ.,வும் அவரது மனைவியும், மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவருமான இலக்குமி இளஞ்செல்வி தரப்பில் குற்றம் சாட்டியுள்ளனர்.
திமுக ஆட்சிக் காலத்தில் கோவையில் செம்மொழிப் பூங்கா, ஜி.டி. நாயுடு மேம்பாலம், பெரியார் நூலகம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர்கள், தற்போதைய நிர்வாகத்தில் பல பணிகள் முடங்கியுள்ளதாகத் தெரிவித்தனர்.
கோவையில் பெய்த மழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மழைக்காலத்திற்கு முன்பாக ஓடைகள், ராஜா வாய்க்கால் உள்ளிட்ட நீர்வழித்தடங்களை முறையாகத் தூர்வாராததே இதற்குக் காரணம் எனக் குற்றம்சாட்டப்படுகிறது.
மேலும், பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளதுடன், கோவை கிழக்கு மண்டலத்தில் நூற்றுக்கணக்கான பணிகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்துப் பேசிய கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத் தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், புதிய நிறுவனங்கள் ஒப்பந்தப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளன. பழைய டெண்டர் எடுத்த அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பித்தால், தொழில்நுட்பத் தகுதி இல்லை எனக்கூறி சில பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார்.
பூங்கா பராமரிப்புப் பணிகளுக்கான ஒப்பந்தத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், மாமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தும் அதிகத் தொகைக்கு ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திமுகவுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்தும் நோக்கில் அதிகாரிகள் செயல்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
மழைநீர் வீடுகளுக்குள் புகுவதைத் தடுக்க மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள வளர்ச்சிப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
