கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், அண்மையில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த 8 நாட்களில் நடைபெற்ற 264 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 15,328 நபர்கள் பயனடைந்துள்ளனர் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அண்மையில் பெய்த கனமழையினால் தேங்கிய மழைநீர் போர்கால அடிப்படையில் அகற்றப்பட்டது. அந்த இடங்களில் மாநகராட்சி பொது சுகாதார துறையின் சார்பில், வடகிழக்கு பருவமழை சிறப்பு மருத்துவ முகாம் கடந்த 23 முதல் 28ம் தேதி வரை பல்வேறு இடங்களில் நடைபெற்றது.

இந்த முகாம்களில் 11,021 நபருக்கு ஒ.ஆர்.எஸ். குடிநீர், கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 264 சிறப்பு முகாம்களில் 15,328 நபர்கள் பங்கேற்று பயனடைந்தனர். இதில், 49 நபர்களுக்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு ரத்த பரிசோதனை மேற்கொள்ள அரசு மருத்துவ நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

33 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர், மழைநீர் தேங்கி அகற்றப்பட்ட பகுதிகளில் மழைக்காலத் தொற்றுநோய்களைத் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலக் குறைபாடுகள் ஏதேனும் உள்ளனவா எனப் பரிசோதனை மேற்கொண்டு, தேவையானவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கினர். மேலும், ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட கூடுதல் பரிசோதனைகள் மற்றும் மேல்சிகிச்சை தேவைப்பட்டவர்களை அரசு மருத்துவமனைகளுக்குப் பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர்.

இதன் மூலமாக பொதுமக்களுக்கு நீரினால் பரவக்கூடிய மழைக்கால தொற்றுநோய்களான வயிற்றுப்போக்கு, டைப்பாய்டு, மஞ்சள் காமாலை, எலி காய்ச்சல் உள்ளிட்டவை ஏற்படாதவாறு அப்பகுதிகளில் பொதுமக்கள் கொதிக்க வைத்து ஆற வைத்த தண்ணீர் மட்டுமே குடிக்கவேண்டும் என்று விழிப்புணர்வு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

மேலும், அப்பகுதிகளில் சுகாதார ஆய்வாளர்கள் குடிநீரில் குளோரின் அளவை பரிசோதித்து பாதுகாப்பான குடிநீர் என்பதனை உறுதி செய்தனர். அதேபோல், மாநகராட்சி சுகாதாரப் பணியாளர்களால் கூட்டுத்தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பொதுமக்கள் நலன் கருதி இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் மேலும் 5 நாட்களுக்கு நடைபெறவுள்ளது. பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.