கோவையில் அதிநவீன காவல் கட்டுப்பாட்டு அறை திறப்பு… 1500 சிசிடிவி கேமராக்கள் ஒரே இடத்தில் கண்காணிப்பு!
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில் அதிநவீன வசதிகளுடன் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாஸ்டர் கமாண்ட் மற்றும் கண்ட்ரோல் சென்டரை கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில், மேற்கு மண்டல காவல் துறை தலைவர் ரம்யா பாரதி, கோவை சரக காவல் துணை தலைவர் சாமிநாதன், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், கோவை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்ட காவல் அலுவலகத்தின் 4வது மாடியில், சுமார் 3,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாட்டு மையம், 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் உள்ள மிக முக்கியப் பகுதிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்புச் சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV மற்றும் அதிநவீன ANPR கேமராக்கள் நேரடியாக ஒரே இடத்தில் இருந்து கண்காணிக்கப்பட உள்ளன.
குற்றவாளிகளின் நடமாட்டத்தை நொடிப் பொழுதில் கண்டறியும் இந்த டெக்னாலஜி மூலம் இனி கோவை மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் பெருமளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறையின் ஒட்டுமொத்த செயல்பாட்டையும் டிஜிட்டல் மயமாக்கும் இந்த புராஜெக்ட்டில், மாவட்டம் முழுவதும் உள்ள 1500க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமராக்கள், அனைத்து காவல் நிலையங்களின் கண்காணிப்பு வெப்கேம்கள், ‘டயல்-100’ அவசர உதவி சேவை ஆகியவை இந்த ஒரே கமாண்ட் சென்டருடன் இணைக்கப்பட்டுள்ளன.
களத்தில் இருக்கும் போலீஸாரைக் கண்காணிக்கும் Kakki beat, Smart Kavalar செயலிகள், சோஷியல் மீடியா கண்காணிப்புப் பிரிவு, சைபர் கிரைம், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவு, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு எனப் பல முக்கியப் பிரிவுகள் இந்த சிங்கிள் விண்டோ சிஸ்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, மாவட்ட எஸ்.பி யின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

