சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில் ‘உணவே மருந்து’ என்ற தலைப்பில் பிரபல சித்த மருத்துவர் கு. சிவராமன் உரையாற்றிய நிகழ்ச்சி நடைபெற்றது.

சித்த மருத்துவர் சிவராமன் பேசுகையில்: இன்றைய காலகட்டத்தில் நமது ஆரோக்கியத்தைப் பேண நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கிய செய்தி உணவே மருந்து என்பதுதான்.
உடலின் கட்டமைப்புக்கும் நோய் எதிர்ப்பு சக்திக்கும் புரதச்சத்து அவசியம். உங்கள் எடை எவ்வளவு இருக்கிறதோ, அதே அளவுக்கு கிராம்களில் (எ.கா: 50 கிலோ எடை என்றால் 50 கிராம்) தினமும் புரதச்சத்து தேவை. நிலக்கடலை, சுண்டல், பாசிப்பயறு, தட்டப்பயறு, கொண்டைக்கடலை, சோயா போன்ற சைவ உணவுகளில் புரதச்சத்து நிறைந்துள்ளது.
பெண் குழந்தைகளிடம் இரும்புச்சத்து குறைபாடு அதிக அளவில் காணப்படுகிறது. முருங்கைக்கீரை, பேரீச்சம்பழம், அத்திப்பழம், கறிவேப்பிலை, எள்ளுருண்டை, மாதுளை சாறு ஆகியவற்றில் இரும்புச்சத்து அதிகமுள்ளது.
இரும்புச்சத்தை உடல் சரியாகக் கிரகிக்க வேண்டுமென்றால் வைட்டமின் சி தேவை. அதற்குப் பெரிய நெல்லிக்காய், மோர், கீரை வகைகளை உணவில் தினமும் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்களாவது பெரிய நெல்லிக்காய் சாப்பிடுவது முதுமையைத் தடுத்து உடலுக்கு நன்மையைத் தரும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட சிப்ஸ், பர்கர், பீட்சா, பிஸீ டிரிங்க்ஸ் போன்ற ‘அல்ட்ரா பிராசஸ்டு ஃபுட்’ எனப்படும் உணவுகள் உடலுக்குப் பல நோய்களை உண்டாக்குகின்றன. சர்வதேச மருத்துவ ஆய்வுகளின்படி, 85% நோய்களுக்குக் காரணம் இந்த முறையற்ற உணவுகளே.
உணவில் இனிப்பையும், உப்பையும் முடிந்தவரை குறைக்க வேண்டும். ஒரு நாளைக்குச் சராசரியாக 8 கிராம் உப்பு சாப்பிடுகிறோம்; அதை பாதியாகக் குறைக்க வேண்டும். மாறாக, கசப்பு, துவர்ப்பு சுவைகளை அதிகரிக்க வேண்டும். பாகற்காய், வாழைப்பூ, சுண்டைக்காய், வேப்பம்பூ ரசம், கறிவேப்பிலை சட்னி போன்ற கசப்பும் துவர்ப்பும் நிறைந்த உணவுகள் உடலுக்குப் பாதுகாப்பு கேடயமாகச் செயல்படும்.
தினமும் உடற்பயிற்சி, யோகாசனம், பிராணாயாமம் போன்ற மூச்சுப்பயிற்சிகளைத் தவறாமல் செய்ய வேண்டும். உள்ளூர் உணவுகளையும், நம் அருகாமையில் விளையும் காய் கனிகளையும் உண்ண வேண்டும் என்று பேசினார்.
நிகழ்வில் துணை முதல்வர் சக்திவேல், தமிழாசிரியர்கள் கருணாநிதி, சிவக்குமார் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்.
