இந்தியா – ஐரோப்பா வர்த்தக ஒப்பந்தம் இந்திய வரலாற்றில் ஒரு முக்கிய அத்தியாயம் என தென்னிந்திய பஞ்சாலைகள் சங்கம் (சைமா) பாராட்டு தெரிவித்துள்ளது.
இதுகுறித்த செய்தி குறிப்பில் சைமா தலைவர் துரை பழனிசாமி கூறியதாவது: சைமா சார்பாக பிரதமர் நரேந்திர மோடி, வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் இத்தகைய வரலாற்று சாதனையை படைத்துள்ளமைக்கு வாழ்த்துகள்.
இந்த ஒப்பந்தம் இந்திய ஜவுளி ஏற்றுமதிக்கு குறிப்பாக ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளி பொருட்கள், தொழில் நுட்ப ஜவுளி பொருட்கள் மற்றும் துணிகள் ஏற்றுமதியை அதிகரிக்க பெரிதும் உதவும்.
வரியில்லா ஒப்பந்தங்களினால் சுமார் 21 சதவீத பங்கை வகிக்கும் பங்களாதேஷ், 10 சதவீத பங்கை வகிக்கும் வியட்நாம், 5 சதவீத பங்கை வகிக்கும் துருக்கி நாடுகளுடன் போட்டி போடுவதற்கு ஒரு சம தளத்தை ஏற்படுத்தி கொடுத்ததுடன் 29 சதவீதத்தை கொண்டுள்ள சீனா உடனும் போட்டியிட முடியும்.
ஐரோப்பா மற்றும் பிரிட்டன் உடன் ஏற்பட்டுள்ள வரியில்லா வர்த்தக ஒப்பந்தங்களின் மூலம் கூடிய விரைவில் தமிழகத்தின் ஜவுளி ஏற்றுமதிகளை இந்த நாடுகளில் இரட்டிப்பாக்க்க முடியும். இதில் திருப்பூர், கரூர் ஜவுளி மையங்கள் மிக பெரிய பங்கை வகிக்கும். இந்த ஒப்பந்தங்களை விரைவில் முடிக்க தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வந்த தமிழக முதல்வருக்கு நன்றி.
நூற்பு இயந்திரங்களை தவிர பெரும்பாலான நாடா இல்லா தறிகள், துணி சாயமிடும் மற்றும் அச்சிடும் இயந்திரங்கள், தொழில் நுட்ப ஜவுளி உற்பத்தி செய்யும் இயந்திரங்கள், மிக முக்கியமான உதிரி பாகங்களை சுமார் 3 பில்லியன் அமெரிக்கா டாலர் அளவிற்கு ஆண்டுதோறும் இறக்குமதி செய்து வரும் இந்தியாவிற்கு இந்த ஒப்பந்தம் குறைந்த விலையில் இயந்திரங்களையும் உதிரி பாகங்களையும் இறக்குமதி செய்ய உதவும் எனக் கூறியுள்ளார்.
