கோவை மாவட்டத்தில் பொதுமக்கள் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், கியூஆர் கோடு மூலம் போதைப்பொருள் கடத்தல், பெண்கள் பாதுகாப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளைப் புகாராகத் தெரிவிக்க ஏதுவாக “நிழல்” என்ற அதிநவீனத் தொழில்நுட்பப் பொதுப் பாதுகாப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழகத்தின் மிக வேகமாக வளர்ந்து வரும் மாவட்டங்களில் ஒன்றான கோவையில் சுமார் 40.11 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு 2,272-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் உள்ளதால், சட்டம்-ஒழுங்கைப் பராமரிக்கப் புதிய தொழில்நுட்ப அணுகுமுறை அவசியமாகி உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தவும், அவசர காலங்களில் காவல் துறையின் சேவையை விரைவாகக் கொண்டு சேர்க்கவும் “நிழல் (Nizhal) – பாதுகாப்பான சமூகத்திற்காக ஒன்றிணைவோம்” என்ற QR குறியீடு அடிப்படையிலான நவீனப் பாதுகாப்புத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சியர் பவன்குமார் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூடுதல் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர்கள், கல்லூரி மாணவர்கள், மாவட்ட கலால் அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த திட்டத்தின் மூலம் பொதுமக்கள் தங்களது கைப்பேசியின் கேமரா வழியாக ஆங்காங்கே ஒட்டப்பட்டு இருக்கும் QR குறியீட்டை ஸ்கேன் செய்து, காவல் துறையுடன் உடனடியாகத் தொடர்பு கொள்ள முடியும். இத்திட்டத்தின் மிக முக்கியச் சிறப்பம்சம் என்னவெனில், தகவல் அளிப்பவர்களின் அடையாளம் முழுமையாக ரகசியமாகப் பாதுகாக்கப்படும்.
எந்தெந்த குற்றங்கள் குறித்துத் தகவல் தெரிவிக்கலாம் ?
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப்பொருள் கடத்தல், விற்பனை, சந்தேகத்திற்கு இடமான நபர்கள் அல்லது சட்டவிரோதச் செயல்பாடுகள், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்கள் மற்றும் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
24 மணி நேர கண்காணிப்பு
இந்தத் திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் அனைத்தும், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் மாஸ்டர் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் மூலம் 24 மணி நேரமும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும்.
அங்குப் பணியாற்றும் சிறப்புப் பயிற்சி பெற்ற காவல் அதிகாரிகள், கியூஆர் கோடு மூலம் வரும் தகவல்களை உடனுக்குடன் ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பித் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
மாவட்டம் முழுவதும் கியூஆர் கோடுகள்
பொதுமக்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள், தொழிற்சாலைகள், அரசு அலுவலகங்கள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தளங்கள் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்களில் இந்த QR குறியீடுகள் படிப்படியாக நிறுவப்பட உள்ளன
