வரும் வியாழன் (23.4.26) நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில், கோவை மாவட்டத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வானதி சீனிவாசன் வடக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், கோவை வடக்கு தொகுதியில் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர  தொழில் (எம்.எஸ்.எம்.இ) நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் நலனுக்காக உள்ள மத்திய அரசு திட்டங்களை பெற உறுதுணையாக இருப்பேன் என வானதி சீனிவாசன் தி கோவை மெயிலுக்கு வழங்கிய சிறப்பு பேட்டியில் கூறினார்.

“கோவை வடக்கு சட்டமன்ற தொகுதியில் நிறைய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதேபோல அவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. இந்த நிறுவனங்களில் நிறைய தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். அவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் திட்டங்களில் பதிவு செய்யவைத்து அந்த திட்டங்களின் பலன்களை கிடைக்க நான் உதவுவேன். அவர்களுக்கு தேவைப்படும் உதவிகள், கொள்கைகள் குறித்து அவர்களுடைய வலுவான குரலாக நான் சட்டமன்றத்தில் ஒலிப்பேன்,” என கூறினார்.

தான் கடந்த முறை கோவை தெற்கில் போட்டியிட்டபோது அந்த தொகுதியில் குழந்தைகள் ஆரோக்கியம்,  தந்தை இல்லாத பெண் குழந்தைகளின் கல்வி, பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி, சுத்தமான குடிநீர் விநியோகம், இளம் பெண்கள் நலன் & பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தியுள்ளதாக கூறிய வானதி, இம்முறை கோவை வடக்கில் வெற்றி பெற்றால் அதை இங்கு செயல்படுத்துவதோடு அடிப்படை வசதிகள் மக்களுக்கு கிடைப்பதன் மேல் அதிக கவனம் செலுத்துவேன் என உறுதியாக கூறினார்.