கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கான வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் வரும் செப்., 7 முதல் 25-ம் தேதி வரை (ஞாயிறு, விடுமுறை நாட்களை தவிர) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.

சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களான, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான கிழக்கு மண்டல அலுவலகம், சௌரிபாளையம் சமுதாயக்கூடம், காளப்பட்டி, உப்பிலிபாளையம், சேரன்மா நகர் ஆகிய பகுதிகளிலுள்ள வார்டு அலுவலகங்களிலும்,

மேற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான மேற்கு மண்டல அலுவலகம், வடவள்ளி, கவுண்டம்பாளையம், வேலாண்டிபாளையம், அண்ணாமார்க்கெட் ஆகிய பகுதிகளிலுள்ள வார்டு அலுவலகங்களிலும்,

தெற்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான தெற்கு மண்டல அலுவலகம், செல்வபுரம், போத்தனூர், குறிச்சி, கோவைப்புதூர் ஆகிய பகுதிகளிலுள்ள வார்டு அலுவலகங்களிலும்,

வடக்கு மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான வடக்கு மண்டல அலுவலகம், ஆவாரம்பாளையம், காந்திமாநகர், சரவணம்பட்டி, துடியலூர் ஆகிய பகுதிகளிலுள்ள வார்டு அலுவலகங்களிலும்,

மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளான பிரதான அலுவலகம், ராமநாதபுரம் சமுதாயக்கூடம், காந்திபுரம், சிவானந்தாகாலனி, ரத்தினபுரி ஆகிய பகுதிகளிலுள்ள வார்டு அலுவலகங்களிலும், என ஐந்து மண்டல அலுவலகங்களிலும் லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

இந்த முகாமில், தங்களது சாலையோர வியாபாரிகளுக்கான அடையாள அட்டை, ஆதார் அட்டை மற்றும் வங்கி கணக்கு புத்தகம் போன்ற ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன் பெறலாம். மேலும், உணவு தொடர்பான வணிகம் செய்யும் சாலையோர வியாபாரிகள் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் விழிப்புணர்வு பயிற்சி பெற்று, உரிமம் பெறவும் மற்றும் இணையம் மூலம் பணப்பரிவர்த்தனையில் இணைத்துக் கொள்ளவும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கோவை மாநகராட்சி தெரிவித்துள்ளது.