தொழில்நுட்ப யுகத்தில் வெற்றிபெற ‘உள்நிலை நல்வாழ்வில்’ முதலீடு செய்வது அவசியம் என இந்திய தொழில்நுட்பக் கழக முன்னாள் மாணவர்களின் அமைப்பு சார்பில் அமெரிக்காவில் நடைபெற்ற உலகளாவிய மாநாட்டில் சத்குரு உரையாற்றினார்.
இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் 75 ஆண்டுகாலச் சிறப்பைக் கொண்டாடும் வகையில், ஏப்ரல் 22 முதல் 25 வரை கலிபோர்னியாவின் லாங் பீச் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற உலகளாவிய தொழில்நுட்ப மாநாட்டில் சத்குரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இம்மாநாட்டில் சத்குரு பேசியதாவது, இந்தியாவை ஒரு நாடாக மட்டும் பார்க்காமல், ஒரு நாகரிகமாகப் பாருங்கள். ஒரு நாகரிகமாக, நம்மிடம் வேறு எங்கும் இல்லாத தனித்துவமான அம்சங்கள் உள்ளன. அறிவுசார் மற்றும் அறிவியல் தேடல்களுடன், வாழ்க்கையின் உள்நிலை பரிமாணங்களை ஆராயும் நீண்டகால பாரம்பரியத்தை நம் பாரத நாகரிகம் கொண்டுள்ளது. அந்த வகையில் விழிப்புணர்வுடன் கூடிய சமநிலையான எதிர்காலத்தை வடிவமைக்க, நம் பாரத மரபே மிகவும் பொருத்தமானதாகும்.
இனி வரும் காலங்களில் ஒரு தலைமுறையில் நிகழவேண்டிய மாற்றங்கள் வெறும் சில ஆண்டுகளிலேயே நிகழ்ந்துவிடக் கூடும். இதனால் மனிதர்கள் உள்நிலையில் உறுதியும் தெளிவும் பெறுவது முன்னெப்போதையும் விட முக்கியமானது.
இந்த கிரகத்திலேயே மனித இயந்திரம் தான் மிகவும் மேலான மற்றும் நுணுக்கமான தொழில்நுட்பம். எனவே, இந்த உள்நிலைத் தொழில்நுட்பத்துடன் நாம் ஆழமான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். செயற்கை நுண்ணறிவு மற்றும் அதீத மாற்றங்கள் நிறைந்த இக்காலகட்டத்தை நாம் வெற்றிகரமாகக் கடக்க வேண்டுமானால், மனித நல்வாழ்வு, தெளிவு மற்றும் திறன் ஆகியவை மிகவும் அவசியமானவை எனப் பேசினார்.
