தமிழகத்தில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், அரிசி விலை கடந்த சில மாதங்களில் 4வது முறையாக அதிகரித்துள்ளது. ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சன்ன ரக நெல் உற்பத்தி போதுமான அளவில் இல்லாததால், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்கு வங்காளம், மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. தற்போது பல்வேறு மாநிலங்களிலும் நெல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், தமிழகத்திலும் அரிசி விலை அதிகரித்து வருகிறது.
ரூ.1,400க்கு விற்பனை செய்யப்பட்ட டீலக்ஸ் பொன்னி அரிசி ரூ.1,800 ஆகவும், ரூ.1,600க்கு விற்பனை செய்யப்பட்ட பொன்னி அரிசி ரூ.1,950 ஆகவும் உயர்ந்துள்ளது. வெள்ளை பொன்னி அரிசி ரூ.1,900ல் இருந்து ரூ.2,300 ஆக அதிகரித்துள்ளது.
இட்லி அரிசி ரூ.900ல் இருந்து ரூ.1,200 ஆகவும், பச்சரிசி ரூ.1,500ல் இருந்து ரூ.1,800 ஆகவும் உயர்ந்துள்ளது. 25 கிலோ சிவாஜி பொன்னி அரிசி ரூ.1,800ல் இருந்து ரூ.2,400 ஆகவும், 30 கிலோ பாஸ்மதி அரிசி ரூ.3,300ல் இருந்து ரூ.3,600 ஆகவும் அதிகரித்துள்ளது. அதாவது ஒரு மூட்டை அரிசி ரூ.300 முதல் ரூ.600 வரை அதிகரித்துள்ளது.
அரிசி ஆலைகளில் நெல் கையிருப்பு குறைந்துள்ளதால், விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தீபாவளிக்கு முன் ஒரு கிலோ அரிசி ரூ.100-ஐ தாண்டும் நிலை ஏற்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
