கோவை காந்திபுரம், டாக்டர் நஞ்சப்பா சாலையில் அமைந்துள்ள ஆரோக்யா சித்த மருத்துவமனை சார்பில் கழுத்து, முதுகு, இடுப்பு மற்றும் முழங்கால் மூட்டு வலிகளுக்கான “நலமுடன் நடப்போம்” என்ற சிறப்பு இலவச மருத்துவ ஆலோசனை முகாம் அதன் வளாகத்தில் வரும் அக்டோபர் 12 முதல் 17ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்த 6 நாள் முகாம் தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். இந்த முகாமில் பங்கேற்பவர்களுக்கு இலவச மருத்துவ ஆலோசனையுடன், நோய்க்கேற்ப தனிப்பட்ட உணவு ஆலோசனைகளும் வழங்கப்படும். மேலும் எக்ஸ்-ரே, ரத்தப் பரிசோதனைகள், மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகள், ஆரோக்கியா அங்காடிப் பொருட்கள் மற்றும் வர்ம சிகிச்சை உள்ளிட்ட புற மருத்துவ சிகிச்சைகளுக்குச் சிறப்புச் சலுகைகளும் வழங்கப்பட உள்ளன.
இம்முகாம் குறித்து ஆரோக்யா சித்த மருத்துவமனை நிறுவனரும், பிரபல சித்த மருத்துவருமான சிவராமன் பேசுகையில், முன்பெல்லாம் மூட்டு மற்றும் தசை வலிகள் முதியவர்களை மட்டுமே பாதிக்கக்கூடியதாக இருந்த நிலை மாறி, தற்போது இளைஞர்களும் இதில் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களை நீண்ட தூரம் ஓட்டுபவர்கள் மற்றும் தொடர்ந்து கார்களில் பயணிப்பவர்களுக்கு ஏற்படும் அதிர்வுகள் காரணமாகக் கழுத்து மற்றும் இடுப்புப் பகுதிகளில் கடுமையான வலி ஏற்படுகிறது என தெரிவித்தார்.
அதேபோல், அலுவலகங்களில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதாலும், உடல் உழைப்பு குறைவதாலும் தசைகளின் வலிமை குறைந்து இளைஞர்களுக்கும் நடுத்தர வயதினருக்கும் இவ்வகை வலிகள் அதிகம் ஏற்படுகின்றன. அத்தகையவர்களுக்கு இந்த முகாம் பெரிதும் பயனளிக்கும், என கூறினார்.
மேலும் இம்முகாமில் சிகிச்சை வழிமுறைகள் குறித்துப் பகிர்ந்த அவர், முகாமிற்கு மருத்துவர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கி ஆலோசனைகளை வழங்கவுள்ளார் என்றும், தீவிர பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்குத் தேவைப்படும் பட்சத்தில் நேரிலேயே இணையவழியில் தன்னுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும் என்றும் பகிர்ந்துகொண்டார்.
பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்றுப் பயன்பெற 7338852309 அல்லது 0422-4519033 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சித்த மருத்துவம் – இன்றைய தலைமுறையினரின் பார்வை
இன்றைய உலகம் தகவல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்ப உலகமாக மாறியுள்ளது. இளைஞர்களும் நடுத்தர வயதினரும் தங்களுக்குத் தேவையான தகவல்களை இணையத்திலும் சாட்.ஜி.பி.டி போன்ற தளங்களிலும் தேடி, ஒரு மூலிகையின் மருத்துவக் குணம் மற்றும் அதன் மீதான மருத்துவப் பரிசோதனைகளை நேரடியாகத் தெரிந்துகொள்கின்றனர்.
முன்னரெல்லாம் நாங்களே மூலிகைகளின் நன்மைகள் மற்றும் ஆராய்ச்சிகள் குறித்துத் தேடி எடுத்து விவரிக்க வேண்டியிருந்தது; ஆனால் இன்று உலகம் முழுவதும் பாரம்பரிய மருத்துவத்திற்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை அவர்கள் சுயமாகவே உணர்ந்து வருகின்றனர்.
இதனால் இளைஞர்கள் மத்தியில் சித்த மருத்துவத்தின் மீதான நம்பிக்கையும் அதன் வரவேற்பும் அபரிமிதமாக உயர்ந்துள்ளது, என்று சிவராமன் தெரிவித்தார்.
