தமிழகத்தில் கோடைவிடுமுறை தொடங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் ஓய்வெடுக்கவும், வெயிலில் இருந்து தப்பிக்கவும் ஊட்டி, கொலைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கு செல்லத் தொடங்கி விட்டனர்.
நீலகிரியில் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்படுவது வழக்கம். இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள். இந்த ஆண்டும் கோடை விழாவிற்கு ஏராளமானோர் வருகை தருவார்கள் என்பதால் ஊட்டியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் பொருட்டு சில கட்டுப்பாடுகளை மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
அதன்படி வரும் மே ம் தேதி காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை ஊட்டி நகருக்குள் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் வாகனங்களுக்கு மட்டும் இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பால், பெட்ரோல் மற்றும் எரிவாயு சமையல் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதிக்கப்படும்.
கோடை விழாவை முன்னிட்டு, பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள், மலர் கண்காட்சிகள் மற்றும் சுற்றுலா சார்ந்த நிகழ்வுகள் நடைபெற உள்ளதால், மாவட்ட நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.
