மாநகராட்சி 21வது வார்டு சங்கரா மருத்துவமனை அருகில் சிவானந்தபுரம், விளாங்குறிச்சி ரோடு, கணபதி மாநகர் சுற்று பகுதிகளில் சுமார் 6,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மக்களுக்காக 24 லட்சம் லிட்டர் மற்றும் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மிகப்பெரிய குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த குடிநீர் மேல்நிலைத் தொட்டிகளுக்கு இடையில், மாநகராட்சியின் 20 வார்டுகளில் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை தரம் பிரிக்கும் மையம் அமைப்பதற்காக கட்டுமான பணிகளுக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் மேல்நிலை குடிநீர் தொட்டிகள் அருகில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்தக் கோரி மாநகராட்சி ஆணையாளரிடம் அப்பகுதி பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.
மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 21-க்கு உட்பட்ட சங்கரா கண் மருத்துவமனைக்கு அருகில் உள்ள எம்.எஸ்.ஆர் டேங்க் வளாகத்தில், சுமார் 20 வார்டுகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகளைக் கொண்டு வந்து கொட்டி தரம் பிரிப்பதற்கான கட்டுமானப் பணியினை மாநகராட்சி அதிகாரிகள் துவங்கியுள்ளனர்.
இத்தகவலை அறிந்து, உடனடியாக 21-வது வார்டு மாமன்ற உறுப்பினர் பூங்கொடி சோமசுந்தரம் மற்றும் 20-வது வார்டு மாமன்ற உறுப்பினர் மரியராஜ் ஆகியோருடன் இணைந்து நாங்கள் அப்பகுதியை நேரில் சென்று பார்வையிட்டோம்.
இப்பகுதியில் 24 லட்சம் லிட்டர் மற்றும் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு பிரம்மாண்டமான மேல்நிலை குடிநீர் தேக்க தொட்டிகள் அமைந்துள்ளன. இங்கிருந்துதான் ஒண்டிபுதூர் வரையிலான பகுதிகளுக்குப் பொதுமக்களுக்கான குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த குடிநீர் தொட்டிகள் மற்றும் மருத்துவமனையின் மிக அருகில் குப்பை தரம் பிரிக்கும் மையம் அமைந்தால், கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.
குடிநீர் மாசுபாடு: குப்பைகளில் இருந்து வெளியாகும் துர்நாற்றம், நச்சு வாயுக்கள் மற்றும் நோயை உருவாக்கும் கிருமிகள் அருகில் உள்ள குடிநீர் தொட்டிகளில் கலந்து விநியோகிக்கப்படும் நீர் முற்றிலும் மாசடையும். நோயாளிகள் சிகிச்சை பெறும் சங்கரா கண் மருத்துவமனையின் அருகிலேயே குப்பை கிடங்கு அமைவது அங்குள்ள சுகாதாரச் சூழலைக் கடுமையாகப் பாதிக்கும்.
பொதுமக்களின் ஆரோக்கியத்தையும், குடிநீர் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, இந்த திட்டத்தை உடனடியாக இப்பகுதியில் செயல்படுத்துவதை நிறுத்த வேண்டும்.
இல்லையெனில், பொதுமக்களின் வாழ்வாதாரத்தையும் சுகாதாரத்தையும் காக்க, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களைத் திரட்டி போராட்டங்களை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
எனவே, இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு, மாற்று இடத்தில் இத்திட்டத்தை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
