தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தின் கோவை மண்டல அவசர பொதுக்குழுக் கூட்டம் திருப்பூரில் நடந்தது. சங்கத் தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார். செயலாளர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், மூலப்பொருட்களின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதைக் கருத்தில் கொண்டு, அட்டைப் பெட்டிகளின் விலையை தற்போதைய விலையிலிருந்து 25 சதவீதம் உயர்த்துவது என தீர்மானிக்கப்பட்டது.

மேலும், மூலப்பொருட்களின் தொடர்ச்சியான விலை உயர்வை கருத்தில் கொண்டு, அக்., 9, 10 ஆகிய இரண்டு நாட்கள் உற்பத்தியை நிறுத்துவது என முடிவு செய்யப்பட்டது. அந்த இரு நாட்களிலும் அட்டைப் பெட்டிகளுக்கான லோடிங், அன்லோடிங் பணிகளும் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டது.

அட்டைப் பெட்டி உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை ரொக்கத்திற்கு வாங்க வேண்டிய நிலை உள்ளதால், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் அட்டைப் பெட்டிகளுக்கான தொகையை அதிகபட்சம் 30 நாட்களுக்கு மேல் கடனாக வழங்க இயலாது எனவும் தீர்மானிக்கப்பட்டது. மேலும், சப்ளை செய்யப்படும் அட்டைப் பெட்டிகளுக்கான போக்குவரத்து கட்டணத்தை தனியாக வசூலிப்பது எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.