கோவை, ராவ் மருத்துவமனை சார்பில் உலக தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. தாய்ப்பால் ஊட்டுதல் தொடர்பான பொதுவான சந்தேகங்கள், பிறந்த குழந்தைகளின் உணவளிப்பு முறை, தாய்மார்களின் ஊட்டச்சத்து, துணை உணவுகளை அறிமுகப்படுத்தும் சரியான காலம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பேசப்பட்டது. நிகழ்விற்கு ராவ் மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் ஆஷா ராவ் தலைமை தாங்கினார்.

20. c scaled

மூத்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசுகையில்: குழந்தைகளுக்கான மிகச் சிறந்த மற்றும் முழுமையான ஊட்டச்சத்து தாய்ப்பாலே. குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்கள் முழுமையாக தாய்ப்பால் மட்டுமே வழங்கப்பட வேண்டும்.

பின்னர், பொருத்தமான துணை உணவுகளுடன் இரண்டு ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் தாய்ப்பால் தொடர வேண்டும். தாய்ப்பால் குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதுடன், ஆரோக்கியமான உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கும் முக்கிய பங்காற்றுகிறது என்றார்.

20. a scaled

பாலூட்டல் ஆலோசகர் மற்றும் குழந்தை ஊட்டச்சத்து நிபுணர் பேபி ஸ்ரீ கூறியதாவது: குழந்தை சரியாக மார்பகத்தைப் பற்றிப் பால் குடிக்கும் முறை, தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள், பால் சுரப்பு, தாய்ப்பால் ஊட்டும்போது ஏற்படும் பொதுவான சவால்களை சமாளிக்கும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார். தாய்ப்பாலைத் தொடர்ந்து எந்தக் காலகட்டத்தில், எவ்வாறு துணை உணவுகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்பது குறித்து விளக்கினார்.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, மூத்த மகப்பேறு மற்றும் கருத்தரிப்பு நிபுணரான டாக்டர் சுகன்யா கதிர், பிரசவத்திற்குப் பிந்தைய மனித பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி குறித்து பேசினார்.

அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்!

குழந்தை பிறந்தவுடன் முடிந்தவரை விரைவாக தாய்ப்பால் கொடுக்கத் தொடங்க வேண்டும். குழந்தையின் தேவைக்கேற்ப தாய்ப்பால் வழங்க வேண்டும். சரியான உடல் நிலை மற்றும் மார்பகப் பற்றுதலை உறுதிசெய்ய வேண்டும்.

மருத்துவ ஆலோசனை இல்லாமல் தேவையற்ற முறையில் புட்டிப்பால் அல்லது பால் மாவு வழங்குவதைத் தவிர்க்க வேண்டும். போதிய அளவு தண்ணீர் அருந்தி, சத்தான சமச்சீர் உணவை உட்கொள்ள வேண்டும். தாய்ப்பால் ஊட்டுவதில் சிரமங்கள் ஏற்பட்டால் ஆரம்பத்திலேயே நிபுணர்களின் உதவியை நாட வேண்டும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.