தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது தவெக பெண் வேட்பாளர் சத்யபாமா குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கருத்துகள் அரசியல் நாகரிகத்திற்கும், பெண்களின் கண்ணியத்திற்கும் எதிரானவை என கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண்கள் அரசியல் களத்தில் போட்டியிடுவது கேலி செய்வதற்காக அல்ல; மக்களின் நம்பிக்கையைப் பெற்று மக்கள் பணியாற்றுவதற்காக! வாக்கு அரசியலுக்காக ஒரு பெண் வேட்பாளரின் உருவத்தை கேலி செய்து இழிவுபடுத்துவது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

அரசியல் விமர்சனம் என்பது கொள்கைகளையும் செயல்பாடுகளையும் விமர்சிப்பதாக இருக்க வேண்டும்; ஒரு பெண்ணின் தோற்றத்தை வைத்து தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதாக இருக்கக் கூடாது.

மூத்த அரசியல் தலைவரான மு.க.ஸ்டாலினே பெண்களை இவ்வாறு கேலிக்குள்ளாக்கும் வகையில் பேசினால், அவரது கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களிடம் இருந்து பெண்களுக்கு எவ்வாறு மரியாதையை எதிர்பார்க்க முடியும்? பெண்களின் கண்ணியத்தை அரசியல் ஆதாயத்திற்காக பலிகடா ஆக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. கருத்துடன் போரிடுங்கள் !! பெண்களின் உருவத்துடன் அல்ல. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.