கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் சமூக வலைதளப் போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த வீடியோவுக்கு ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
மழைநீரை வீணாக்காமல் சேகரித்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதன் அவசியத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில், ‘மழை Free… வீணாக்காதீங்க!’ என்ற தலைப்பில் இப்போட்டி நடத்தப்படுகிறது.
இதில், பொதுமக்கள் தங்களது வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், அலுவலகங்கள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் சிறப்பம்சங்களை வீடியோவாக பதிவு செய்ய வேண்டும்.

அந்த வீடியோவை கோவை மாநகராட்சியின் சமூக வலைதளப் பக்கமான @cbecorp உடன் இணைந்து (Collaboration Post) வரும் டிச., 24ம் தேதிக்குள் பதிவிட வேண்டும். பதிவாகும் வீடியோக்களில் சிறந்ததாக தேர்வு செய்யப்படும் ஒரு வீடியோவுக்கு ரூ.5,000 பரிசுத்தொகை வழங்கப்படும்.
மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்புகளை முறையாகப் பராமரிப்பதுடன், புதிய கட்டமைப்புகளை உருவாக்கவும் பொதுமக்களை ஊக்குவிப்பதே இப்போட்டியின் நோக்கம். குடியிருப்போர் நலச்சங்கங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் போட்டியில் பங்கேற்கலாம். இதனை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தெரிவித்துள்ளார்.
