தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் உயரத் தொடங்கியது நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று (நவம்பர் 25) 22 காரட் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 குறைந்து, ரூ.91,360-க்கும் விற்பனையாகிறது.
தங்க நகை வாங்க நினைப்பவர்களுக்கு இந்த விலை இறக்கம் நிம்மதி அளிக்கும் வகையில் இருந்தாலும், இப்போதே தங்கம் வாங்கலாமா அல்லது இன்னும் விலை குறையும் என காத்திருக்கலாமா என்ற கேள்வியும் பலரிடமும் எழுந்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவில் வெளியாகவுள்ள மூன்று முக்கியப் பொருளாதாரத் தகவல்கள் தங்கத்தின் அடுத்தகட்ட விலை நகர்வில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என சந்தை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
தங்கம் விலை ஏன் சரிந்தது?
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட சர்வதேச தங்கத்தின் விலை, நவம்பர் மாதத்தில் குறிப்பிடத்தக்க சரிவைச் சந்தித்துள்ளது. அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு, அந்நாட்டின் அரசு பத்திரங்களுக்கான வருவாய் அதிகரிப்பு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தலாம் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை தங்கத்தின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளன.
பொதுவாக வட்டி தராத முதலீடாகத் தங்கம் இருப்பதால், வட்டி விகிதம் உயரும்போது முதலீட்டாளர்கள் தங்கத்தைவிட வட்டி கிடைக்கும் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். இதனால் தங்கத்தின் மீதான தேவை குறைந்து விலையும் சரிய வாய்ப்புள்ளது.
தங்கம் விலையைத் தீர்மானிக்கப்போகும் 3 முக்கியத் தேதிகள்
நவம்பர் 25 – அமெரிக்க பணவீக்க அறிக்கை
இன்று அமெரிக்காவின் அக்டோபர் மாத தனிநபர் வருமானம் மற்றும் செலவின அறிக்கை வெளியாகிறது. இதில் இடம்பெறும் PCE பணவீக்க விவரங்களை அமெரிக்க மத்திய வங்கி முக்கியமாகக் கவனிக்கும். பணவீக்கம் அதிகமாக இருந்தால் வட்டி விகிதம் குறையாமல் தொடரலாம். இது தங்கத்தின் விலைக்கு அழுத்தம் கொடுக்கலாம். பணவீக்கம் குறைந்தால் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது.
டிசம்பர் 4 – அமெரிக்க வேலைவாய்ப்பு அறிக்கை
அமெரிக்காவின் நவம்பர் மாத வேலைவாய்ப்பு நிலவரம் வெளியாகிறது. வேலைவாய்ப்பு வலுவாக இருந்தால் டாலரின் மதிப்பு உயர்ந்து தங்கத்தின் விலை குறையலாம். வேலைவாய்ப்பு பலவீனமாக இருந்தால் தங்கத்தின் விலை உயர வாய்ப்புள்ளது.
டிசம்பர் 9 – அமெரிக்க மத்திய வங்கியின் முடிவு
டிசம்பர் 8, 9 தேதிகளில் நடைபெறும் கூட்டத்தின் முடிவில் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிடும். வட்டி விகிதத்தில் மாற்றம் ஏற்படுகிறதா, எதிர்காலத்தில் என்ன முடிவு எடுக்கப்படும் என்பதைக் கொண்டு தங்கச் சந்தையில் மாற்றம் ஏற்படலாம்.
