போத்தனூர் ரயில் நிலையம் கோவையின் இரண்டாவது முனையமாக மாற்றப்படும் என்றும், பணிகள் நிறைவடைந்தவுடன் புதிய ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்  தெரிவித்துள்ளார்.

அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் போத்தனுார், வடகோவை, கரூர் உள்ளிட்ட பல ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகின்றன. இதில் போத்தனுார் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங் ஆய்வு மேற்கொண்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில்: போத்தனூர் ரயில் நிலையம் 2வது முனையமாக தரம் உயர்த்தப்படுகிறது.  மேம்பாட்டு பணிக்காக ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளில் பணிகள் நிறைவடையும். பின்னர் போத்தனூரில் இருந்து புதிய ரயில்கள் இயக்கப்படும் என தெரிவித்தார்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் போல, போத்தனூர் ரயில் நிலையத்தை 2வது முனையமாக மாற்ற வேண்டும் என இங்குள்ள தொழில் முனைவோர்கள், ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், விரைவில் பணிகள் தொடங்கி, 3 ஆண்டுகளில் நிறைவடையும் என்ற தகவல்,  என பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.