இயற்கை பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் சூழல் மேம்பாட்டிற்காக தொடர்ந்து செயல்பட்டு வரும் ராயல் கேர் மருத்துவமனையின் தலைவரும், உயிரின் சுவாசம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலருமான டாக்டர் மாதேஸ்வரனுக்கு, ஜனனி அமைப்பின் சார்பில் “உயிர் சூழல் 2026” விருது  பல்லடம் வனாலயத்தில் வழங்கப்பட்டது.

எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி வரும் உலகப் புகழ்பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் மாதேஸ்வரன், மருத்துவ சேவையைத் தாண்டி இயற்கை பாதுகாப்பிலும் முக்கிய பங்காற்றி வருகிறார்.

உயிரின் சுவாசம் அறக்கட்டளை மூலம், 10 கோடி மரக்கன்றுகளை 100 மாதங்களில் நடவு செய்ய  வேண்டும் என்ற குறிக்கோளோடு இருக்கிறார். இந்த முயற்சியின் மூலம் இதுவரை ஒரு கோடியே 30 லட்சத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு தொடர்ச்சி மலைக்கு அருகேயுள்ள நூற்றுக்கணக்கான ஊர்களில், நிழல் மரங்கள், பூ மரங்கள், டிம்பர் மரங்கள், பழ வகை மரங்கள் மற்றும் ஸ்தல மரங்களை வைத்து வளர்க்கப்பட்டு வருகின்றன.

2018 ஆம் ஆண்டு முதல் கோவை ராயல் கேர் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவ பயனாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்களுக்கும் தேவைக்கேற்ப இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இலவச மரக்கன்றுகள் மற்றும் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சேவையை பாராட்டி அவருக்கு உயிர் சூழல் விருது வழங்கப்பட்டது. நிகழ்வில் அவரது துணைவியார் ஸ்ரீகலா மாதேஸ்வரன் கலந்து கொண்டார். இந்த விருதை யுஆர்சி கன்ஸ்ட்ரக்ஷன் தலைவர் தேவராஜன், வனம் இந்தியா அறக்கட்டளை சுந்தர்ராஜன், ஜனனி ரீஜென் உஷா தேவி வெங்கடாசலம் ஆகியோர் இணைந்து வழங்கினர்.