உலகம் முழுக்க நிலவும் கணினி நினைவு சாதனங்களின் (RAM & DDR5) விலையுயர்வால் ஸ்மார்ட்போன் மற்றும் மடிக்கணினிகளின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. இதனால் இவற்றின் விற்பனை பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில் இப்போது மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுவரை இந்த பாதிப்பால் விலையை உயர்த்தாமல் தனது சேவைகளை வழங்கியது போல இனி வரும் நாட்களில் தொடருவது மிக கடினமான ஒன்று என இந்தியாவை சேர்ந்த மிகப்பெரும் சாப்ட்வேர் தயாரிப்பு நிறுவனமான ஜோஹோ கார்ப்ரேஷனின் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

செயற்கை நுண்ணறிவு சேவைகளை வழங்க ‘ஏ.ஐ. டேட்டா சென்டர்’ களில் கணினி நினைவு சாதனங்களின் தேவை மிக அவசியம். கடந்த 1 ஆண்டாக இந்த தேவை அதிகரிகத்து வருகிறது. இந்த சாதனங்கள் ஸ்மார்ட் போன் வேகமாக இயங்கவும், அதன் பணிகளை செய்யவும் கட்டாயம் தேவை.

இந்த நினைவு சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், செயற்கை நுண்ணறிவு துறை தலைதூக்க துவங்கும் முன் வரை ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அவற்றை எந்த ஒரு சவாலும் இல்லாமல் வழங்கி வந்தன. ஆனால் இப்போது செயற்கை நுண்ணறிவு துறை நிறுவனங்களுக்கு தங்கள் நிறுவனங்கள் தயாரிக்கும் நினைவு சாதனைகளை திருப்பி விட்டால் கொள்ளைலாபம் கிடைக்கும் என்பதால் அந்த பக்கம் சென்றுவிட்டன.

இதனால் வழக்காமான இந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு போதிய அளவில் நினைவு சாதனங்களை வழங்குவதில் இடையூறு ஏற்பட்டுள்ளது. DDR5 ரக நினைவு சாதனம் சென்ற ஆண்டு ஆகஸ்ட் ரூ.8600 ஆக இருந்தது இப்போது சுமார் ரூ.40,000 ஆகியுள்ளது. அதுவே உயர்வான நினைவு சாதனங்கள் ரூ.31,490 யில் இருந்து ரூ. 3,25,000 ஆக உயர்ந்துள்ளது.

இதனால் தற்போது சந்தையில் இருப்பதிலேயே குறைந்த நினைவு ஆற்றல் கொண்ட 4 ஜி.பி.ரேம் ஸ்மார்ட்போனின் விலை ரூ.8000லிருந்து ரூ.15,000 ஆக உயர்ந்துள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எந்த வகையிலும் லாபம் இல்லாத வகையில் தான் இன்றைய ஸ்மார்ட்போன் சந்தை மாறி வருகிறது. திறன் குறைவான பொருளை அதிக விலைகொடுத்து வாங்கவேண்டிய சூழலில் இருந்து தப்பிக்க பலரும் தங்களின் பழைய ஸ்மார்ட்போனையே பயன்படுத்துகின்றனர்.