ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இம்மாதம் முதன்முறையாக பொதுமக்களுக்கு தன் நிறுவனத்தின் பங்குகளை விற்று, முதலீட்டைத் திரட்டும் ‘பொதுப் பங்கு வெளியீடு’ நடவடிக்கையை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது. ஜியோ நிறுவனத்தின் மொத்த மதிப்பு குறைந்தது ரூ.12 லட்சம் கோடியாக இருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை மூலம் அதன் மதிப்பு மேலும் உயரலாம்.
இன்றைய நிலவரப்படி ஜியோ-வின் 66.43% பங்குகள் ரிலையன்ஸ் நிறுவனத்திடமும் மீத 33.57% பங்குகள் கூகிள், மெட்டா மற்றும் பிற முதலீட்டாளர்கள் கைகளில் இருந்துவருகின்றன.
தற்போது வெளிவந்துள்ள தகவல்கள் படி, ரூ. 38,000 கோடி மதிப்பிலான பங்குகளை ஜியோ விற்கவுள்ளது. இதை இந்திய மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் யார் வேண்டுமானாலும் வாங்க முன்வரலாம். இதை சாத்தியப்படுத்த ஆகாஷ் மற்றும் ஈஷா அம்பானி அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய், ஹாங் காங், சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு சென்று முதலீட்டாளர்களை ஈர்த்துள்ளனர்.
ஜியோ-வின் பங்கு விற்பனைக்கான அதிகாரபூர்வ அறிவிப்புகள் மிக மிக விரைவில் வெளிவரும். இதற்கான இறுதிக்கட்ட ஆவணங்களை செபி எனப்படும் ‘இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம்’ முன்னர் ஜியோ விரைவில் தாக்கல் செய்ய உள்ளது. எனவே நீங்கள் நினைத்தாலும் ரிலையன்ஸ் ஜியோ-வின் பங்குகளை இந்த ஆண்டில் வாங்கலாம், இதனால் நீங்களும் ஜியோவின் உரிமையாளர் ஆகலாம்.
