கோவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் துடியலூர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள மருத்துவர்கள் செவிலியர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்ததை தொடர்ந்து அதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

மேலும் துடியலூர் காய்கறி சந்தையில் ஆய்வு மேற்கொண்ட அவர் அங்குள்ள காய்கறி வியாபாரிகள் இடமும் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இங்கு பணியாட்கள் பற்றாக்குறை இருப்பதாக தெரிவித்துள்ளனர். அதற்கான நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்படும். தெருநாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக வருவதாக தெரிவித்துள்ளனர், அதற்கான மருந்துகள் கிடைப்பதிலும் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். அவையும் கூடிய விரைவில் சரி செய்யப்படும். அதே சமயம் நாய்கடிகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார்.

சந்தை நடைபெறும் இடத்திலும் சில பிரச்சனைகள் உள்ளது. லீசுக்கு எடுப்பவர்கள் உடனடியாக காலி செய்ய வேண்டும் என கூறி இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து ஏற்கனவே அவர்கள் மனு அளித்துள்ளார்கள். அது சம்பந்தமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அந்த பகுதியில் கழிவுகள் பிரச்சனை அதிக அளவு உள்ளது. அவை கூடிய விரைவில் சரி செய்து தரப்படும் என்று தெரிவித்தார்.