கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி, பில்லூர் 1, 2, 3 திட்டங்கள், கவுண்டம்பாளையம் – வடவள்ளி – வீரகேரளம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மற்றும் ஆழியாறு திட்டம் ஆகியவற்றின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை போதிய அளவு பெய்யாததால், குடிநீர் ஆதாரங்களாக உள்ள அணைகளின் நீர்மட்டம் சரிந்தது.

குறிப்பாக, ஆகஸ்ட் மாதத்தில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 25 அடிக்கும் கீழ் குறைந்தது. இதனால், மழைப்பொழிவு இல்லாத நிலையில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 49.53 அடி முழுக் கொள்ளளவு கொண்ட சிறுவாணி அணையில் தற்போது 39.40 அடிக்கு நீர் உள்ளது. அதேபோல், 100 அடி உயரம் கொண்ட பில்லூர் அணையில் நீர்மட்டம் 91 அடியாக உள்ளது.

இதற்கிடையே, நவம்பர் மாதத்திலும் கோவையில் நல்ல மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், வரும் மார்ச் மாதம் வரை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீர் விநியோகத்தில் எந்தப் பிரச்சினையும் இருக்காது என மாநகராட்சி அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மலைப் பகுதிகளைவிட சமவெளிப் பகுதிகளில் அதிக மழை பெய்துள்ளது. இருப்பினும், சிறுவாணி, பில்லூர் அணைகளின் நீர்ப்பிடிப்பு மலைப் பகுதிகளில் அமைந்துள்ளன. அங்கும் தொடர்ந்து நல்ல மழை பெய்தால், கோடைக் காலத்திலும் குடிநீர் விநியோகத்தைச் சிரமமின்றி மேற்கொள்ள முடியும் என்றனர்.