தமிழகத்தில் நடப்பாண்டு காற்றாலை சீசனில், ஏப்ரல் முதல் செப்டம்பர் 27-ம் தேதி வரை மொத்தம் 12,356.3 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்தேவையை பூர்த்தி செய்வதில் காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி முக்கிய பங்கு வகிக்கிறது.

இதுகுறித்து காற்றாலை மின் உற்பத்தி தொழில்துறையினர் கூறியதாவது:
தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்திக்கான நிறுவப்பட்ட திறன் கடந்த ஆண்டு 9,299 மெகாவாட்டாக இருந்தது. தற்போது இது 9,495 மெகாவாட்டாக உயர்ந்துள்ளது.

நடப்பாண்டு காற்றாலை சீசன் மே 19-ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 27-ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த காலகட்டத்தில், ஒரே நாளில் 100 மில்லியன் யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்ட நிகழ்வு 57 முறை பதிவாகியுள்ளது.

ஆகஸ்ட் 1-ம் தேதி அதிகபட்சமாக 142.43 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. அன்றைய தினம், மொத்த நிறுவப்பட்ட திறனான 9,495 மெகாவாட்டில், 6,731 மெகாவாட் அளவுக்கு மின்உற்பத்தி பதிவானது.

பொதுவாக காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் ஆடி மாதம், காற்றாலை மின்உற்பத்திக்கு உகந்த காலமாக கருதப்படுகிறது. நடப்பாண்டிலும் ஆடி மாதத்தில் மின் உற்பத்தி சிறப்பாக இருந்தது. அந்த மாதத்தின் 31 நாட்களில், 27 நாட்கள் தினசரி 100 மில்லியன் யூனிட்டுக்கும் அதிகமாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.

வழக்கமாக ஆண்டுதோறும் சுமார் ஆறு மாதங்கள் நீடிக்கும் காற்றாலை சீசன், நடப்பாண்டில் நான்கு மாதங்களிலேயே நிறைவடைந்துள்ளது. இந்த ஆண்டு ‘சூப்பர் எல் நினோ’ காலநிலை மாற்றத்தால் காற்றாலை மின் உற்பத்தியில் பாதிப்பு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இருப்பினும், மின் உற்பத்தியில் பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால், சீசன் வழக்கத்தைவிட முன்னதாகவே முடிவடைந்ததாக காற்றாலை தொழில்துறையினர் தெரிவித்தனர்.