கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் (கொடிசியா), தொழிலாளர் மாநில காப்பீடு கழகம் (இஎஸ்ஐசி) சார்பில், புதிய தொழிலாளர் குறியீடு அமல்படுத்தும் முறை குறித்த சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகத்தில் சமீபத்தில் நடந்தது.
கொடிசியா தலைவர் ரங்கசாமி பேசும்போது: குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சமூக பாதுகாப்பு 2020 திட்டத்தை செயல்படுத்த சரியான வழிகாட்டுதல் மற்றும் உதவிகள் தேவைப்படுகின்றன. நடைமுறையில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு ‘இஎஸ்ஐசி’ நிறுவனம் தேவையான உதவிகளை செய்து தர வேண்டும். என்றார்.

தொழிலாளர் மாநில காப்பீடு நிறுவனத்தின் கோவை அலுவலக துணை இயக்குநர் கார்த்திகேயன் பேசும்போது: இந்திய அரசு சார்பில் சமூக பாதுகாப்பு 2020 திட்டத்தின்கீழ் நடைமுறையில் உள்ள 9 தொழிலாளர் சட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தொழிலாளர்களுக்கு ஊதியம், இஎஸ்ஐ உள்ளிட்ட பல்வேறு பலன்களை பெறும் நடைமுறைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் நலனை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார்.
தொடர்ந்து நடைமுறைபடுத்தப்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து பங்கேற்பாளர்களுக்கு விளக்கினார். அவர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். 150 எம்எஸ்எம்இ தொழில்முனைவோர், கொடிசியா தொழில் அமைப்பின் முன்னாள் மற்றும் இந்நாள் நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
