கோவை அரசு மருத்துவமனையில் அமைச்சர் சம்பத்குமார் நேற்று நள்ளிரவு திடீரென ரகசிய ஆய்வு மேற்கொண்டது மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

சமீபத்தில் கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், பொதுமக்கள் மற்றும் நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அமைச்சர் வருகை தரும் நேரங்களில் மட்டுமே மருத்துவமனை தூய்மையாக பராமரிக்கப்படுவதாகவும், ஊழியர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதாகவும் சிலர் புகார் தெரிவித்திருந்தனர். இதையடுத்து, இனி முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் திடீர் ஆய்வுகள் நடத்தப்படும் என்று அமைச்சர் எச்சரித்திருந்தார்.

அதன்படி, நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் கோவை அரசு மருத்துவமனைக்கு திடீரென சென்ற அமைச்சர் சம்பத்குமார், பல்வேறு பிரிவுகளில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணியில் இருந்த மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் வருகைப் பதிவுகள், நோயாளிகளுக்கான சேவைகள், மருத்துவமனையின் பராமரிப்பு நிலை, கேண்டீனில் வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் உள்ளிட்டவற்றை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளிடம் விவரங்களை கேட்டறிந்தார்.

அமைச்சர் நள்ளிரவில் திடீரென ரகசிய ஆய்வு மேற்கொண்டது மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. மருத்துவமனையின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும், குறைகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.