2011 விரிவாக்கத்திற்கு முன்னர் கோவை மாநகராட்சியில் இருந்த பழைய 60 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் 24 மணி நேரம் இடைநில்லா குடிநீர் விநியோகிக்கும் திட்டம் கொண்டுவர அப்போதைய அதிமுக அரசு முடிவு செய்தது. 2018 இறுதியில் இதற்கான பணிகள் துவங்கின. கோவிட்-19 போன்ற சில தவிர்க்கமுடியாத காரணத்தால் தாமதம் ஆன இந்த பணிகள், இப்போது வரை நடைபெற்று வருகிறது.
கிட்டத்தட்ட இந்த பணிகள் நிறைவேறிவிட்ட நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன் – அதாவது பிப்ரவரி 2026ல் இந்த திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் முயற்சிகளை வேகப்படுத்தியது.
பலமுறை இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டிய இறுதிநாளை ,மாநகராட்சிக்காக இந்த பணிகளை முன்னெடுத்துள்ள ஒப்பந்த நிறுவனமான சூயஸ் தவறவிட்டுள்ளது. இப்போது தேர்தல் முடிந்து புது ஆட்சி அமைந்து விட்ட நிலையில் இனிமேலாவது இந்த திட்டத்தை கொஞ்சம் வேகப்படுத்தி நிறைவேற்றுவார்கள் என மக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
1.5 லட்சம் வீட்டு குடிநீர் இணைப்புகளுக்கு இடைநில்லா குடிநீர் வழங்கும் நோக்கில் துவங்கப்பட்ட இந்த திட்டம் மாநகராட்சியின் பிற இடங்களில் உள்ள மேலும் 2 லட்சம் வீடுகளுக்கு பயன்தரும் வகையில் விரிவாக்கம் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் உள்ளது.
எங்கெல்லாம் 24/7 குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது தெரியுமா?
வடக்கு மண்டலத்தில் 11 வார்டுகள் (வார்டு எண். 3, 12, 18, 19, 20, 25, 26, 27, 28, 29, 30); தெற்கு மண்டலத்தில் 6 வார்டுகள் (வார்டு எண். 76, 77, 78, 79, 86, 87), மேற்கு மண்டலத்தில் 10 வார்டுகள் ( வார்டு எண் . 41, 42, 43, 44, 45, 71, 72, 73,74, 75), மத்திய மண்டலத்தில் 20 வார்டுகள் (வார்டு எண். 31, 32, 46, 47, 48, 49, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 80, 81, 82, 83, 84) மற்றும் கிழக்கு மண்டலத்தில் 13 வார்டுகள் (வார்டு எண். 24, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61)
காட்சிகள் மாறுவதில்லையா ?
இந்த திட்டம் நிறைவு பெறாமல் நீண்டுகொண்டே செல்வதாலும், அடிக்கடி புதிதாக போடப்பட்ட சாலைகளில் இந்த திட்டத்திற்காக உடைப்புகள் ஏற்படுவதாலும், பொதுமக்கள் மாநகராட்சி மேல் வருத்தத்தில் இருந்தனர். இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவித்ததிலிருந்து அதுபோன்ற சம்பவங்கள் கோவை மாநகரில் குறைந்து காணப்பட்டது. சாலைகள் சரிவர இல்லாத இடங்களில் சாலைகள் வேகமாக போடப்பட்டன. ஆனால் இப்போது மீண்டும் குடிநீர் தொடர்பான பணிகளுக்காக சாலைகள் உடைக்கப்படுவதை காணமுடிகிறது.
உடைக்கப்படும் சாலைகளை தரமாக சீரமைக்க ஒப்பந்த நிறுவனம் நடவடிக்கை எடுக்கவேண்டியது அவசியம். தவறும் பட்சத்தில் அதற்கான தொகை பிடித்தம் செய்யப்படும் என மாநகராட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எப்போது தான் இந்த திட்டம் நிறைவேறும் எனவும் அடிக்கடி சாலைகள் உடைக்கப்படுவது எப்போது நிறுத்தப்படும் எனவும் மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

