கோவை பெரியகடை வீதியில் அமைந்துள்ள அருள்மிகு கோனியம்மன் திருக்கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணிக்கையின்போது நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பாக, கோயில் பணியாளர்கள் 4 பேர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகள் 4 பேர் என மொத்தம் 8 பேரை பணியிடை நீக்கம் செய்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவத்தில் பணியாளர்கள் 4 பேர், திருட்டை கண்காணித்து தடுக்கத் தவறியதாக 2 சரக ஆய்வாளர்கள், செயல் அலுவலர் மற்றும் உதவி ஆணையர் ஆகியோர் மீது பொறுப்புக் குறைபாடு சுமத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சம்பவத்தில் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டார்.
இந்த நடவடிக்கையில் கோவில் பணியாளர்களான சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பணியாளர் பிரதீப்குமார் மற்றும் பூசாரி கிருஷ்ணராஜ், சரக ஆய்வாளர்கள் ராம்குமார், உதயகுமார் ; செயல் அலுவலர் குமார் மற்றும் உதவி ஆணையர் உஷா நந்தினி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
மேலும், சம்பவம் குறித்து காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

