தமிழகத்தில் அறுவடைக் காலத்தில் நல்ல தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை குவிண்டாலுக்கு ரூ.2,700 ஆக இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
மக்காச்சோளம் மனித உணவுத் தேவைக்கு மட்டுமின்றி, கால்நடைத் தீவன உற்பத்தி, எரிபொருள் கலவை மற்றும் மாவுச்சத்து தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்களிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இதனால், நாட்டில் மக்காச்சோளத்தின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் 2025–26-ம் ஆண்டுக்கான மூன்றாவது முன்கூட்டிய மதிப்பீட்டின்படி, இந்தியாவில் 144.08 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 550.93 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, பீகார், ஆந்திரப் பிரதேசம் ஆகியவை முக்கிய உற்பத்தி மாநிலங்களாக உள்ளன.
சமீபகாலமாகப் பருவமழை குறைந்துள்ளதால், கரீஃப் பருவ மக்காச்சோளம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இயல்பைவிடக் குறைவான மழைப்பொழிவு காரணமாக மக்காச்சோளத்தின் விளைச்சலும் சாகுபடிப் பரப்பும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க வேளாண்மைத் துறையின் 2026-ம் ஆண்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சுமார் 5.4 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் 33 லட்சம் டன் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், விழுப்புரம், திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் மக்காச்சோளம் உற்பத்தியில் முக்கிய இடம் வகிக்கின்றன.
இருப்பினும், தமிழகத்தின் மக்காச்சோளத் தேவையைப் பூர்த்தி செய்ய பீகார், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் மக்காச்சோளம் வரத்து உள்ளது. இதனால், வெளிமாநில வரத்து தமிழகச் சந்தை விலையில் முக்கியத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
மேலும், தென் தீபகற்பப் பகுதியில் வடகிழக்குப் பருவமழை இயல்பைவிடக் குறைவாகப் பெய்யக்கூடும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையத்தின் முன்னறிவிப்பும் கவனத்தில் கொள்ள வேண்டியதாக உள்ளது. மழைப்பற்றாக்குறை காரணமாக உற்பத்தி மற்றும் வரத்து பாதிக்கப்பட்டால், மக்காச்சோளத்தின் விலையிலும் மாற்றங்கள் ஏற்படலாம்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் வேளாண் பொருளியல் துறையில் செயல்பட்டு வரும் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை நுண்ணறிவுப் பிரிவு, உடுமலைப்பேட்டை சந்தையில் கடந்த 15 ஆண்டுகளாக நிலவிய மக்காச்சோள விலைகளை ஆய்வு செய்துள்ளது. இதனுடன் சந்தை நிலவரங்களும் பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆய்வின் அடிப்படையில், அறுவடைக் காலத்தில் நல்ல தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை குவிண்டாலுக்கு சுமார் ரூ.2,700 ஆக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், பீகார் மாநிலத்திலிருந்து தமிழகத்துக்கு வரும் மக்காச்சோளத்தின் அளவைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படலாம். எனவே, விவசாயிகள் தகுந்த விற்பனை முடிவுகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
