தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வரும் ஜூன் 23, 24 ஆகிய தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்புத் திருவிழா நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில், பல்கலைக்கழகத்தின் பல்வேறு உறுப்புக் கல்லூரிகளில் இருந்து இளங்கலை வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், தொழில்நுட்பம், முதுகலை மற்றும் முனைவர் பட்டப் படிப்பு பயிலும் 2000-க்கும் மேற்பட்ட இறுதி ஆண்டு இளம் பட்டதாரி மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.
எனவே, திறமையான மற்றும் ஆற்றல்மிக்க புதிய பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முன்னணி வேளாண் சார்ந்த நிறுவனங்கள், விதை, உரம் மற்றும் பண்ணை இயந்திரங்கள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள், சுய வேளாண் தொழில் முனைவோர் நிறுவனங்கள், முன்னணி பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தங்களுக்குத் தேவையான தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு அழைக்கப்படுகிறார்கள்.
இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், காலிப்பணியிட விவரங்களை முன்கூட்டியே பதிவு செய்ய [email protected] மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது 0422-6611242 என்ற எண்களிலோ நேரடியாகத் தொடர்பு கொள்ளலாம்.
