இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் தென்மேற்கு பருவமழை, ஜூன் முதல் செப்டம்பர் வரை நான்கு மாதங்கள் நீடிக்கும். இந்த பருவமழை நாட்டின் வேளாண்மை மற்றும் குடிநீர் தேவைகளுக்கு பெரும் ஆதாரமாக உள்ளது.

இந்த நிலையில், தமிழகம் மற்றும் கேரளாவில் தென்மேற்கு பருவமழை நாளை (ஜூன் 4) தொடங்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவுகள், கேரளா மற்றும் தமிழகத்தின் சில பகுதிகள், மேற்கு மற்றும் மத்திய வங்காள விரிகுடா, வடகிழக்கு வங்காள விரிகுடா உள்ளிட்ட பகுதிகளில் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலைகள் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பொதுவாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி, கடலோர கர்நாடகா, மகாராஷ்டிரா, டெல்லி, கொல்கத்தா மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு படிப்படியாக பரவி மழைப்பொழிவை வழங்கும்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக பதிவாகி வருகிறது. இந்நிலையில் பருவமழை தொடங்குவதால் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளிலும் மழை பெய்யும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

மேலும், சில இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூன் மாதத்தில் வெப்பம் மற்றும் மழை மாறி மாறி பதிவாகும் சூழல் நிலவக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.