கோவை பெரியார் அறிவுலகத்தில் புத்தக டெண்டர் முறைகேடு புகாரரில், தனி குழு அமைத்து விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சம்பத் குமார் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத் குமார் கலந்து கொண்டு மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு கடனுதவிகளை வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார், கோவை மாவட்டத்தில் பள்ளிக் கல்வியை முடித்து கல்லூரியில் சேரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சியும், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றதாக தெரிவித்தார்.

புத்தகங்கள் கொள்முதல் செய்வதற்கான டெண்டரில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தவறு நடைபெற்றது 100 சதவீதம் நிரூபிக்கப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ஊடகங்கள் தங்களது கவனத்திற்கு கொண்டு வரும் விவகாரங்களையும் உரிய முறையில் பரிசீலித்து வருவதாக தெரிவித்தார்.

மாணவர்களுக்கு தரமான சைக்கிள்களை வழங்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் கொள்கை. மாணவ, மாணவிகள் விரும்பும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. உறுதித்தன்மை மற்றும் சிறப்பான தொழில்நுட்ப அம்சங்கள் கொண்ட சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது.

மேலும், சுமார் 300 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரைச் செயல்படுத்தும் திறன் கொண்ட நிறுவனங்களே தகுதி பெற வேண்டும். தகுதியான நிறுவனங்களுக்கு டெண்டர் வழங்குவதே உரிய நடைமுறை.

அரசு நிர்ணயித்துள்ள பட்ஜெட்டின் அடிப்படையிலேயே கொள்முதல் நடைபெறும். சிலர் யாருடைய தூண்டுதலின் பேரில் பேசுகின்றனர் என்பது தெரியவில்லை.

அமெசான் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்களில் பல்வேறு பொருட்கள் வெவ்வேறு விலைகளில் கிடைக்கலாம். விற்பனை குறைவாக உள்ள பிராண்டுகளுக்கு விலைக் குறைப்புகள் அறிவிக்கப்படலாம்.

கடந்த முறை சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட்ட விலையை விட தற்போது குறைவான விலையில் வாங்கப்படுகிறது.  டெண்டர் தொடர்பாக யார் வேண்டுமானாலும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஆனால், அதில் உண்மைத்தன்மை இருந்தால் நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

இது தொடர்பாக குழு அமைத்து விசாரணை நடத்த உள்ளதாகவும், யாரிடம் சைக்கிள்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.