உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் சைக்கிள் பேரணி கோவை பந்தய சாலை பகுதியில் ஞாயிறு அன்று நடைபெற்றது.
பேரணியில் சுமார் 200 மாணவர்கள் கலந்து கொண்டர். இதனை எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர், ரேஸ் கோர்ஸ் காவல் நிலைய காவல் ஆய்வாளர் கந்தசாமி கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
நிகழ்வில், அறக்கட்டளையின் தலைமை செயல் அதிகாரி ராம்குமார், தலைமை நிர்வாக அதிகாரி மகேஷ்குமார், கல்லூரியின் முதல்வர் டாக்டர் தீபானந்தன், பொது சுகாதார பல் மருத்துவம் துறை தலைவர் டாக்டர் அருண் கே. சைமன், பேராசிரியர்கள், கல்லூரியின் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் செய்தியாளர்கள் சந்திப்பில் டாக்டர் அருண் பேசுகையில்: ஒருவர் சிகரெட், பீடியை புகைக்கும் போது, அந்தப் புகை அருகே நிற்பவருக்கும் உடல்நல பாதிப்பை ஏற்படுத்துகிறது. புகை இல்லாத புகையிலை பொருட்களை பயன்படுத்தும் போது பாதிப்பு ஏற்படுத்தாது என எண்ணுகின்றனர். இது முற்றிலும் தவறானது.
புகையிலையின் அனைத்து வடிவங்களும் தீங்கானது. மக்கள் எந்த வகை புகையிலையையும் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும் என கூறினார்.