சேலம் ரயில்வே கோட்டத்தில் அபாய சங்கிலியை அவசியமின்றி இழுத்து ரயிலை நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் மட்டும் 57 முறை இந்த சம்பவம் நடந்துள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.

ரயில்களில் தீ விபத்து, திருட்டு, வழிப்பறி, தவறி கீழே விழுதல் நிகழ்ந்தால் பயணிகள் ரயில் பெட்டிகளில் உள்ள அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவது வழக்கம். ஆனால், சமீபகாலமாக அவசியமின்றி விளையாட்டாக ரயில்களில் அபாய சங்கிலியை பிடித்து இழுக்கும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. அதன்படி சேலம் கோட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 57 முறை அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளனர்.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறும்போது: கடந்த சில நாட்களாக முன்பதிவு பெட்டிகளில் பயண சீட்டு இன்றி பயணிக்கும் நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிக்க டிக்கெட் எடுத்துக் கொண்டு முன்பதிவு பெட்டிகளில் பயணித்த 1,076 பேர் எச்சரிக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் முன் பதிவு இல்லா பெட்டிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுபோன்று ரயிலில் பயண சீட்டின்றி பயணம் செய்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ரயில்களில் அவசர காலங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் அபாய சங்கிலி அவசியமின்றி இழுத்து நிறுத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இது மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் குறித்த நேரத்தில் ரயிலை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் அபாய சங்கிலியை இழுத்த சம்பவங்கள் 57 முறை அரங்கேறி உள்ளன. அதில் உரிய விசாரணை மேற்கொண்டதில் 42 சம்பவங்கள் முறையான காரணம் எதுவும் இன்றி நடந்து இருக்கிறது. இவ்வாறு காரணமின்றி அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்துவோருக்கு ரயில்வே சட்டப்படி அபராதம், அல்லது ஒரு ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.