இந்தியன் பிரிமியர் லீக் என்றால் கூட தெரியாதவர்கள் ஒன்று இரண்டு பேர் இருக்கலாம், ஆனால் ஐ.பி.எல்.என்றால் தெரியாதவர்கள் நிச்சயம் இருக்கமுடியாது.
உலகின் முன்னணி கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டிகளில் முக்கியமான ஒன்றாக 2008 முதல் இருந்து வரும் ஐ.பி.எல்.போட்டி, இப்போது அதன் 19வது பதிப்பில் உள்ளது.
ஆனால் இந்தியாவில் தொலைக்காட்சி பார்வையாளர்களின் பழக்கவழக்கங்களை அளவிடும் மிக முக்கியமான அமைப்பான பார்க், தனது ஆய்வில் இந்தாண்டின் ஐ.பி.எல்.போட்டிகளின் முதல் பாதி சீசன் வரை அதை பார்வையிடுவோர் எண்ணிக்கை 26% குறைந்துள்ளதாக கூறியுள்ளது.
மேலும் ஐ.பி.எல்.போட்டிகளின் தொலைக்காட்சி ரேட்டிங்ஸ் 18.8% குறைந்துள்ளதாக மீடியா ஆராய்ச்சி அமைப்பான டாம் ஸ்போர்ட்ஸ் கூறியிருக்கிறது. இதற்கு என்ன காரணம் என விவாதங்கள் நடைபெறும் நேரத்தில், பலரும் சொல்லுவது பார்வையாளர்களுக்கு இப்போட்டிகளை கண்டு ஒருவிதமான அயர்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதையே.
எதனால் அயர்ச்சி?
2008ல் 59 மேட்ச்களுடன் துவங்கிய போட்டி, 2021 வரை 60 ஆக மட்டுமே இருந்தது. 2022ல் 74 போட்டிகளாக இது அதிகரிக்கப்பட்டது. இந்த நிலையில் முதலில் 60 போட்டி நடந்தாலும் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு எதிராணியினரை 200 ரன்களுக்குள் சுருட்டுவார்கள். ஆனால் இப்போதெல்லாம் 200 ரன்களை கடப்பது எளிதாகி விடுகிறது.
பந்துவீச்சாளர்கள் இப்போது பந்தாடப்படுவதாக விமர்சனங்கள் எழுகிறது. உதாரணத்திற்கு இம்முறை மும்பை இந்தியன்ஸ் அணி பிளே அப் சுற்றுக்கு நுழையாமல் போக பந்துவீச்சாளர்களின் சுமாரான பங்களிப்பே காரணமாக பேசப்படுகிறது. நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ராவின் மீதும் ரசிகர்கள், நிபுணர்கள் விமர்சனத்தை வைத்தபடி உள்ளனர்.
மிக விரைவில் இந்த 20 ஓவர் போட்டிகளில் 250க்கும் மேல் ரன் குவிப்பது வழக்கமான ஒன்றாக கூட மாறலாம் எனவும் பேசப்படுகிறது. இதில், 2028 முதல் ஐ.பி.எல். போட்டிகளில் 94 மேட்ச்கள் இடம்பெற்றால் எப்படி இருக்குமென பி.சி.சி.ஐ. யோசித்து வருகின்றதாம்.
இதுவும் கூட காரணமா?
ஐ.பி.எல். போட்டிகளை கொண்டு பணத்தை பந்தயமாக வைத்து விளையாடும் முறையை நிறுத்தும் நோக்கில் ஆன்லைன் கேமிங் ஊக்குவிப்பு மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம், 2025 கொண்டுவரப்பட்டது.
முதலில் இதுபோன்ற பந்தயங்களை நடத்திவந்த நிறுவனங்களில் பார்வையாளர்களில் ஒரு தரப்பினர், பணத்தை கட்டி, தங்கள் தேர்வு வெல்லுமா என பார்த்து வந்தனர். இப்போது இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதால் அந்த பிரிவினர் ஐ.பி.எல். போட்டிகளை பார்ப்பதை தவிர்த்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதுவும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

