கோவை காந்திபுரத்தில் திமுக ஆட்சிகாலத்தில் கட்டிவரப்பட்ட பெரியார் அறிவுலகம் அந்த ஆட்சிக்காலத்திலேயே 99% பணிகளை நிறைவேற்றி முடிக்கப்பட்டது. 2026 சட்டமன்ற தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பின்னர், இந்த மாபெரும் நூலகம் திறக்கப்பட்டது.

திறந்ததும் சில நாட்களில் தான் அம்பலமானது குறைந்தது 2000க்கும் மேற்பட்ட புத்தகங்கள் போலியானவை என்று. இதுகுறித்து தீவிர விசாரணையில் தமிழக போலீசார், லஞ்ச ஒழிப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். போலி நூல்களை தயாரித்த அகல்விளக்கு அச்சகத்தின் நிறுவனர் கைதாகி உள்ளார். விசாரணை தொடர்கிறது.

பகுத்தறிவை கொண்ட சமூகமாக தமிழ் சமூகம் என்றும் இருக்கவேண்டும் எனும் தத்துவத்தை ஆழ விதைத்த பெரியார் நினைவாக கட்டப்பட்ட நூலகத்தில் இப்படியொரு விஞ்ஞான ஊழல் செய்த அயோக்கியர்கள் நிச்சயம் பதில்சொல்லவேண்டும், தண்டிக்கப்படவேண்டும் என அனைவரும் கூறும் நிலையில், இது தொடர்பான ஒரு கருத்தும், அதற்கான எதிர்கருத்தும் இப்போது மக்கள் மன்றத்தில் புது விவாதத்தை துவக்கிவைத்துள்ளது.

ஒரு நூல் வெளியீட்டு நிகழ்வில், “பெரியார் அறிவுலகத்தில் அகல்விளக்கு புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ரேக்குகளில் பாவங்கள் கழிய வேண்டுமென்றால், மகா பெரியவருடைய புத்தகங்களை அதில் அடுக்கி வைக்க வேண்டும்” என்று நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன் கூறியிருந்தார்.
periyar library scaled

இதற்கு,  கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை பாராளுமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன், “நூலகக் கொள்முதலில் நடந்திருப்பது ஊழல், அது சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். அதுதான் நீதியரசர்களின் வேலை. நடந்திருப்பது பாவம், அதற்குப் புண்ணியம் செய்ய வேண்டும் என்று சொல்லுவது ஜோதிடர்களின் வேலை. சட்டத்தின் ஞானத்திற்காக அம்பேத்கரும், பகுத்தறிவின் ஞானத்திற்காக பெரியாரும் நாள்தோறும் நினைக்கப்படும் “மகா பெரியவர்கள்,” என பதிலளித்தார்.

இது இருவருக்கிடையே காரசாரா விவாதத்தை துவங்கிவிட்டது. நீதியரசர் ஜி. ஆர். சுவாமிநாதன், ரயில் நிலையத்தில் உயர் ரக காரில், ஆடம்பர உடையில் சு.வெங்கடேசனை பார்த்ததும், ஒரு கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் இப்படி ஆடம்பரமாக இருக்கிறாரே, இது புத்தக ராயல்டி வருமானத்தால் மட்டுமே வந்த வசதியா என பேசலாமா என்றார்.

இதை மலிவான தனிநபர் தாக்குதல். அது என் காரும் இல்லை; எனக்கு இன்று வரை சொந்தக் கார் ஏதுமில்லை. நாடாளுமன்ற உறுப்பினருக்கான பயண உரிமை சார்ந்ததே என் ரயில் பயணம் என பதிலளித்ததோடு, தன் மீது வைக்கப்பட்ட விமர்சனத்துக்கு மேலும் சித்தாந்த ரீதியில் பதிலளித்திருக்கிறார் வெங்கடேசன்.

இவர்கள் இப்படி கருத்து ரீதியாக மோதிக்கொள்ள, சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஆளுக்கு ஒருபக்கம் சார்பு எடுக்கத்துவங்கிவிட்டனர். இப்படியிருக்க பெரியாரும் சரி, மகா பெரியவரும் சரி, அறிவை அனைவர்க்கும் சமமாக கிடைக்கச்செய்யும் கருவியான புத்தகங்கள் விஷயத்தில் ஊழல் செய்ததை நூறு விழுக்காடு அனுமதிக்கமாட்டார்கள் என்பது சத்தியம்.

கல்வியறிவு ஒன்றே அழிவில்லாத சொத்து என்பதை ஏற்கும் தமிழ் சமூகமும்,  பெரியாரும், மகா பெரியவரும் மகிழ எந்த வித சமரசங்களுமின்றி இந்த ஊழலில் ஈடுபட்டவர்கள் உண்மை முகங்களை ஊரறிய செய்து, தக்க  நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும் என்ற ஒற்றை கருத்தில் அனைவரும் ஒன்றுபடுவதே சரியானது.