கால் டாக்சி ஓட்டுனர்கள் நலன் தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட கால் டாக்ஸி கூட்டமைப்பு சார்பில் இன்று மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் கோவை பவர் ஹவுஸ் அருகே நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓலா, உபர், ராப்பிடோ போன்ற தனியார் செயலிகளுக்கு மாற்றாக தமிழ்நாடு அரசே ஒரு ஒருங்கிணைந்த டாக்ஸி முன்பதிவு செயலியை உருவாக்க வேண்டும் எனவும் அதில் பயணிகளுக்கும் ஓட்டுனர்களுக்கும் நியாயமான கட்டணத்தை தொழிற்சங்கங்களுடன் ஆலோசித்து நிர்ணயித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

அதேபோல கோவை விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் அருகே டாக்ஸி ஓட்டுநர்களுக்கு போதுமான பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் இந்த இடங்களில் டாக்ஸி ஓட்டுனர்களுக்கான கழிப்பறை மற்றும் ஓய்வறை வசதிகளை அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து, பைக் டாக்சி சேவையை தடை செய்ய வேண்டும், ஒருவேளை தடை செய்ய இயலாத நிலையில் அவற்றை மஞ்சள் என் பலகை, எப்சி, கமர்சியல் இன்சூரன்ஸ், பர்மிட், வரி உள்ளிட்ட அனைத்து வணிக வாகன விதிமுறைகளின் கீழ்முறை படுத்த வேண்டும், கோவை மாநகரின் முக்கிய பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற நிரந்தர டாக்ஸி நிறுத்தங்களை அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.