சின்ன வெங்காயத்தின் விலை அறுவடையின் போது கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.35 வரை இருக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், சின்ன வெங்காய உற்பத்தியில் உலகளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. மேலும், தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகியவற்றில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
தமிழ்நாட்டின் மொத்த வெங்காய உற்பத்தியில் சின்ன வெங்காயம் மட்டும் கிட்டத்தட்ட 80 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. 2024-25 ஆம் ஆண்டில், 0.44 லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் ஹெக்டேருக்கு சராசரியாக 12 டன் என்ற உற்பத்தித்திறனுடன், 5.28 லட்சம் டன் உற்பத்தி செய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல், தேனி மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்கள் இதன் முக்கிய உற்பத்திப் பகுதிகளாகும். உள்நாட்டுத் தேவை பெரும்பாலும் இப்பிராந்திய உற்பத்தியின் மூலமும், கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து வரும் வரத்துகள் மூலமும் ஈடுசெய்யப்படும்.
அதேவேளையில், தமிழ்நாடு ஒரு முக்கிய ஏற்றுமதி மையமாகவும் செயல்பட்டு, இலங்கை, வங்காளதேசம், மலேசியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் சந்தைகளுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
வர்த்தக வட்டாரங்களின்படி, நடப்புபருவத்தில், சின்ன வெங்காயத்திற்கு, சர்வதேச அளவில் நல்ல தேவை இருப்பதால், மொத்த வெங்காய உற்பத்தியில் தோராயமாக 5 முதல் 10 சதவீதம் வரை ஏற்றுமதி செய்யப்படுகிறது.
தற்போது பெரம்பலூர், தாராபுரம், பல்லடம், உடுமலைப்பேட்டை மற்றும் கர்நாடகா ஆகிய பகுதிகளில் இருந்து அறுவடை செய்யப்படும் புதிய சின்ன வெங்காய வரத்து, திருச்சி மற்றும் திண்டுக்கல்லில் உள்ள முக்கிய சந்தைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இந்தச் சூழலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வுமையத்தின் ‘உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தை தகவல் மையம்’, கடந்த 15 ஆண்டுகளாக திண்டுக்கல் சந்தையில் நிலவிய சின்ன வெங்காயத்தின் விலைகளை ஆய்வு செய்து, சந்தை ஆய்வுகளையும் மேற்கொண்டது. ஆய்வுகளின் அடிப்படையில், தரமான சின்ன வெங்காயத்தின் சராசரி பண்ணை விலை அறுவடையின் போது கிலோவிற்கு ரூ.30 முதல் ரூ.35 வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
