“வானலைகளில் காற்றின் மொழியாய் காலம் உள்ளவரை ‘இசைத்து நம்மை வானொலி மகிழ்வித்து கொண்டே இருக்கும்….”

அந்தக் காலங்களில் மக்களின் பொழுதுபோக்கு ,செய்தி , அன்றாடம் நடக்கும் நாட்டு நடப்புகள் , பொது அறிவுத்  தகவல்கள் இவற்றை எல்லாம் அறிந்து கொள்ள உதவும் ஊடகமாக  வானொலியே  இருந்துள்ளது.  “ஆகாச வாணி செய்திகள் வாசிப்பது.”.. என்று செய்தி வாசிப்பாளர்கள்  குரலும் மொழி நடையும் பாமர மக்களை எளிதாக சென்றடைந்தது.  வானொலிகளில் நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே  உண்டு. ஆனால் அப்பொழுது தனியார் பண்பலை வானொலி நிலையங்களும் இணையதள வானொலிகளும் இருந்ததில்லை, ‘அகில இந்திய வானொலி நிலையங்களும்’ , ‘இலங்கை வானொலி நிலையமுமே ‘  தமிழ் மக்களுக்கு நிகழ்ச்சிகளை வழங்கி வந்தனர், அகில இந்திய வானொலிகளில்  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் பணிக்கு  எழுத்துத் தேர்வு, குரல் வளத் தேர்வு, நேர்முகத் தேர்வு போன்ற தேர்வுகளில் தேர்வாகினால் மட்டுமே   பகுதி நேர நிகழ்ச்சித்  தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்புகள்கிடைக்கும். ஆனால் இந்த வாய்ப்புகளும் மிகவும் அரிதான விஷயமாக இருந்தது. அதன் பின்பு  ‘ தனியார் பண்பலை வானொலி நிலையங்கள்’ தமிழகத்தில் தொடங்கப்பட்டன . இதன் மூலம் ரேடியோ ஜாக்கி  Rj  என்று சொல்லக்கூடிய  நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணிகளின் மோகம் இளைஞர்கள் மத்தியில்  அதிகரித்தது.  “தனியார் பண்பலை வானொலி நிலையங்களில்” பணி புரியும் இளைய தலைமுறை “ரேடியோ ஜாக்கிகள்” பல புதுமையான சுவாரஸ்யமான  நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி நேயர்களின்  மனதில் நீங்கா இடம் பிடித்ததோடு  வானொலித் துறை மூலமாக பிரபலமாகி திரைத்துறையிலும் சாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

rathinavani photos 1 scaled

ரேடியோ ஜாக்கி ( Rj ) கனவுகள்

இப்படி விரைந்து  சாதிக்கவும் ,பிரபலமாகவும் ஆகக்கூடிய  பணியாக Rj பணி இருந்து வருகிறது. இதனால் , Rj ஆக வேண்டும் என்பது இப்போது இருக்கின்ற இளைய தலைமுறையினர் பலரின்  கனவாகவே  உள்ளது. சிலருக்கு நிறைவேறாத ஆசையாகவும் உள்ளது. Rj பயிற்சி மையங்களில் அளவிற்கு அதிகமாக கட்டணம் வசூலிக்கப்படுவதால், பொருளாதார வசதி காரணமாக பயிற்சி மையங்களில் கட்டணம் செலுத்திட இயலாத சூழ்நிலையில் அவர்களது Rj கனவு, கனவாகவேயுள்ளது. மேலும், பண்பலை வானொலி நிலையங்களிலும் , அனுபவம் உள்ளவர்களுக்கு தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. எனவே இளைய தலைமுறையினரின் Rj கனவு கனவாகவே தொடர்கிறது.

rathinavani photos 1

 

இப்படி Rj கனவை சுமந்து கொண்டிருக்கும் இளைய தலைமுறையினருக்கும் மற்றும் இல்லத்தரசிகளுக்கும் அவர்களின் கனவினை நனவாக்கும் வாய்ப்புக் களமாகவும் வானொலிகளில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியில் சேர்வதற்குமான பயிற்சியினை 5 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக  வழங்கி பல ரேடியோ ஜாக்கிகளை உருவாக்கி  சாதனை படைத்து வருகிறார்,தென்காசி மாவட்டம் சிவகிரியை சேர்ந்த மூத்த ஊடகவியலாளர் ஜெ .மகேந்திரன். இவர் கொடைக்கானல் அகில இந்திய வானொலி நிலையத்தில் ( கோடை பண்பலை 100.5) ஐந்து ஆண்டுகள் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், பின்பு திருநெல்வேலி ஹலோ FM 106.4 வானொலி நிலையத்தில் 15 ஆண்டுகள் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும், அதன் பின்பு மகிழ்ச்சி இணைய வானொலியிலும் தற்பொழுது  இரத்தினவானி சமுதாய வானொலியில் நிலைய இயக்குநராகவும் பணிபுரிந்து வருகிறார்.

rathinavani photos 2

வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர் பயிற்சி

தனது வானொலித்துறையின் அனுபவத்தின்  மூலம் ரேடியோ ஜாக்கி ஆக வேண்டும் என்ற கனவோடு இருக்கும் இளைஞர்களுக்கும் இல்லத்தரசிகளுக்கும் வழிகாட்டியாக இருந்து அவர்களுக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்காமல் பயிற்சி வழங்கி அவர்களை ரேடியோ ஜாக்கிகளாக உருவாக்கி பல புதுமையான நிகழ்ச்சிகளை வானொலிகளில் ஒலிபரப்பு செய்து அவர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கி வருகிறார்.  கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள்,இல்லத்தரசிகள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், மாற்றுத்திறனாளிகள், என்று பலருக்கும் தான் கற்ற கலையை சேவையாக கற்பித்து மக்களுக்காக மகத்தான கலைச் சேவையாற்றி வருகிறார்.

rathinavani photos 3

வானொலியில் உலக சாதனை நிகழ்வுகள்

மேலும் மகிழ்ச்சி இணைய வானொலியில்  “சிவகாமியின் சபதம் “நாவலை 30: மணி நேரம் 47 நிமிடங்கள் ஒலிவடிவில்  இடைவெளி இன்றி ஒரே நேரத்தில் ஒலிபரப்பு செய்ததை ‘ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” உலக சாதனை அமைப்பு உலக சாதனை நிகழ்வாக அங்கீகரித்துள்ளது. “பொன்னியின் செல்வன் “, “பார்த்திபன் கனவு” போன்ற நாவல்களை ஒலி வடிவில் தயாரித்து வானொலித் தொடர் நிகழ்ச்சியாகவும் ஒலிபரப்பு செய்திருக்கிறார். இதேபோல் மகிழ்ச்சி இணைய வானொலி மூலம் முக்கிய தினங்கள் மற்றும் தலைசிறந்த தலைவர்களின் பிறந்ததினத்தை முன்னிட்டு சிறுகதை ,கவிதை, மற்றும் கட்டுரைப் போட்டிகளை நடத்தி அதில் சிறந்த படைப்புகளை தேர்தெடுத்து படைப்பாளர்களுக்கு விழா ஏற்படுத்தி விருதுகள் நேரடியாகவும், இணையவழியில் விருதுகள் வழங்கியும் கௌரவப்படுத்துகிறார் .கவிதைகள் மற்றும் கட்டுரைகள் போன்ற படைப்புகளை   இணையதளத்தில் வெளியிட்டு, எழுத்தாளர்களை ஊக்கப்படுத்துவது.  நிறைய கவிஞர்களை உருவாக்கி அவர்களின் புத்தகங்களை வெளியிட்டு சிறந்த கவிஞர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் சமூக சேவகர்களுக்கான விருதுகளையும் அளித்து வருகிறார். இவையாவும் எவ்வித  கட்டணமுமின்றி சேவை மனப்பான்மையோடு செய்து வருகிறார்.

rathinavani photos 4

தற்பொழுது இவர் கோயம்புத்தூரில் ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயங்கிவரும் இரத்தினவானி சமுதாய வானொலியில் நிலைய இயக்குநராக பணியாற்றி வருகிறார். சமுதாய

மாணவர்களுக்கும்  ,கிராமப்புற விவசாயிகளுக்கும், மக்களுக்கும் பயன்தரும் நிகழ்ச்சிகளையும்  விழிப்புணர்வு கருதரங்குகளையும் நடத்தி வருகிறார்.

இவரிடம்  ரேடியோ ஜாக்கியாக பயிற்சி பெற்றவர்கள் தனியார் பண்பலை வானொலி நிலையங்களில் ரேடியோ ஜாக்கியாகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களாகவும் பணி புரிகிறார்கள். மேலும் சிலர் யூடியூப் சேனல் போன்ற சமூக வலைத்தளங்களில்  இடம்பெறும் பதிவுகளுக்கு குரல் பதிவுகளை வழங்கி பொருள் ஈட்டியும் வருகின்றனர். இப்படி ரேடியோ ஜாக்கி பயிற்சி அளிப்பது மட்டுமின்றி அவர்களுக்கு  வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதிலும் வழிகாட்டியாக இருந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

rathinavani photos 6

சமூக அக்கறையோடு ஒலிபரப்பாகும் சமுதாய வானொலி

இரத்தினவாணி  சமுதாய வானொலியில் வேளாண்மை கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மூலம் விவசாயிகளுக்கு பயன்படக்கூடிய இயற்கை விவசாயம்,நவீன விவசாயம், பாரம்பரிய நாட்டு ரகங்கள், காளான் வளர்ப்பு, தேனீ வளர்ப்பு, பட்டுப்பூச்சி வளர்ப்பு, விவசாயத்திற்கு பயன்படக்கூடிய புதிய தொழில்நுட்ப கருவிகள்,தென்னை மரங்களை நோய்கள் தாக்காமல் பராமரிப்பது பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வானொலி மூலமாகவும், மற்றும் மாணவர்களோடு குழு அமைத்து விவசாயிகளை களத்தில் நேரடியாக சந்தித்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்துகிறார்.

மேலும் தற்போதுள்ள நவீன உலகில் காலநிலை மாற்றத்தால் மக்களுக்கும்,நாம் வாழும் பூமிக்கும், இயற்கைக்கும் பல்வேறு தீமைகள் ஏற்படுகிறது. இந்தத் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து  வானொலியில் நாடக வடிவில் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். இந்த காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் (NSS) உதவியோடு கோயம்புத்தூரரை சுற்று அமைந்துள்ள கிராமங்களுக்கு  நேரடியாக சென்று பொதுமக்களிடையே விளையாட்டுகள் மூலம்   காலநிலை மாற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு, மஞ்சப்பை மீண்டும் பயன்படுத்துவது, மரக்கன்றுகள் நடுவது, சுற்றுச் சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாப்பது போன்ற பல்வேறு விழிப்புணர்வு பணிகளை செய்து வருகிறார். தற்பொழுது மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரம் அழித்தல் துறையின் மூலம் மூத்தோருக்கு முதல் வணக்கம் என்ற பெயரில் முதியோரின் நலம் சார்ந்து சிறப்பு நிகழ்ச்சிகளை நாடக வடிவில் தொகுத்து வழங்கி வருகிறார் . இப்படி சமூகம் நலம் சார்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்து வருகிறார்.

 

தமிழ் இலக்கியம் வளர்க்கும் வானொலி நிகழ்ச்சிகள்

தமிழ் மொழி வளர்ச்சிக்காக தமிழ் ஆர்வலர்கள், இலக்கியவாதிகள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள், கவிஞர்கள் போன்றவர்களை கொண்டு  கவியரங்கம் , பட்டிமன்றம்,கவிதைப்போட்டி , கட்டுரைப்போட்டி, இலக்கிய சொற்பொழிவு என தமிழ் மொழி வளர்க்கும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறார். கடந்த திருவள்ளுவர் தினத்தில், இரத்தினவாணி  சமுதாய வானொலியில் 1330 திருக்குறள்களையும் 170 நபர்கள் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக ஒரே நேரத்தில் வானொலியில் ஒலிபரப்பு செய்தார் , இந்த நிகழ்வை ஆல் இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ்” உலக சாதனை அமைப்பு உலக சாதனை நிகழ்வாக அங்கீகரித்துள்ளது எனப்து குறிப்பிட்ட தகுந்தது.

சமுதாய வானொலியில் பிரபலங்களின் நிகழ்ச்சி:

சமுதாய வானொலியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, மத்திய அமைச்சர்கள் எல். முருகன், சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், நடிகர் மாபாகா ஆனந்த், ஈரோடு மகேஷ், நடிகர் ஆதி, பட்டிமன்ற பேச்சாளர் மதுரை ராமகிருஷ்ணன், டாக்டர் கலையமுதன், அறிமுக திரைப்பட இயக்குனர்கள், நடிகர்கள், நடிகைகள், அரசு அதிகாரிகள், தமிழ் அறிஞர்கள், கல்வியாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், சமூக சேவகர்கள், இயற்கை ஆர்வலர்கள்,சாதனைப்  பெண்மணிகள்,தொழில் முனைவோர்கள், என பல்வேறு பிரபலங்களோடு புதுமையான நிகழ்ச்சிகளை தினம் தினம் தொகுத்து ஒலிபரப்பு செய்து வருகிறார்.

 

வானொலித் துறையில் இருக்கும் வேலை வாய்ப்புகள்:

 

பொதுவாக வானொலி என்றால் ரேடியோ ஜாக்கிக்கான பணிகள் மட்டுமே இருக்கும் என்று நிறைய பேர் நினைக்கின்றனர். ஆனால் அதையும் தாண்டி நிகழ்ச்சி தயாரிப்பாளர்,நிகழ்ச்சி தொகுப்பாளர், நிகழ்ச்சி உதவியாளர், ஒலிப் பொறியாளர், ஒலித் தொகுப்பாளர்,மியூசிக் மாஸ்டர், தொழில் நுட்ப உதவியாளர்கள், விளம்பர தயாரிப்பாளர், விளம்பர விற்பனை பணியாளர்கள், என்று எண்ணற்ற பணிகள் பண்பலை வானொலி நிலையங்களில் இருக்கின்றன.

பொதுமக்களிடம் சமூக வலைதளங்களின் தாக்கம் அதிகமாக இருந்தாலும், வானொலி தனக்கான ரசிகர்களை ஏற்படுத்தி தனி முத்திரை பதித்து வைத்திருக்கிறது. இதனால் தற்பொழுது மத்திய அரசு தமிழகத்தில் புதிதாக 11 தனியார் பண்பலை வானொலி நிலையங்கள் தொடங்குவதற்கு ஒப்புதல் வழங்கி இருக்கிறது.

மேலும் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட சமுதாய வானொலி நிலையங்களை அமைப்பதற்கு மத்திய  அரசு ஒப்புதல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி புதிய வானொலி நிலையங்கள் அமைவதால் வானொலித் துறையில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள்  அதிக அளவில் கிடைப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன. வானொலியில் பணியாற்ற தனித்திறமை மிகவும் அவசியமானது தங்களுக்கான தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டால் நல்ல வருமானத்துடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை  வானொலி நிலையங்கள் உறுதி செய்யும். ஊடகத்துறையில் இன்றும் சக்தி வாய்ந்த ஊடகமாக வானொலி வளர்ச்சி பெற்று உள்ளது.

குறிப்பாக எண்ணற்ற தமிழ் இணைய வானொலிகள்  உலக அளவில் தமிழ் மொழி பேசும் மக்களிடையே நல்ல வரவேற்பை  பெற்றிருக்கிறது இதனால் இணைய தளத்தில் எண்ணற்ற இணைய வானொலிகள் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது என்று 25 ஆண்டுகளுக்கு மேலாக வானொலியில் பணி புரிந்த அனுபவங்களை மூத்த ஊடகவியலாளர் ஜெ.மகேந்திரன் அவர்கள் நம்மிடையே பகிர்ந்து கொண்டார் .

இவர் தமிழ்நாடு அரசுக்கு இணைய வானொலியும், கல்வித்துறைக்கு என்று பிரத்யேகமாக கல்வி வானொலியும்  என இணைய வழி வானொலி ஒலிபரப்பை ஏற்படுத்த இலட்சியமாகக் கொண்டுள்ளார். தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுத்தால் இணைய வானொலி ஒலிபரப்பை தொடங்குவதற்கு ஆர்வமாகவும் இருக்கிறார் .இவர் தனது சிறப்பான   சேவையை தொடர்ந்து  செய்திட அரசு ஒத்துழைப்பு தரும்படி வேண்டுதலாக கேட்டுக்கொள்கிறோம். எல்லாவற்றையும் வியாபார நோக்கத்தோடு பார்க்கும் இந்த நவீன உலகில் சேவை மனப்பான்மையோடு பல சேவை ஆற்றி வரும் இவரை நாம் பாராட்டுவோம். நீங்களும் ரேடியோ ஜாக்கியாக தொடர்பு கொள்ளுங்கள் 8838078388.