கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் செயல்பட்டுவரும் அம்மா உணவகங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.
கோவையில் மொத்தம் 12 அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. பயிற்சி முகாமில் மாநகராட்சி ஆணையாளர் பேசுகையில்: அம்மா உணவகங்களில், பொதுமக்களுக்கு தங்கு தடையின்றி சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் உணவுகள் வழங்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, அம்மா உணவகங்களில் பணியாற்றக் கூடிய பணியாளர்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியில் பங்கேற்றுள்ளவர்கள் நல்ல முறையில் பயிற்சிகளை மேற்கொண்டு பயன்பெற வேண்டுமென தெரிவித்தார்.

பயிற்சி முகாமில், FSSAI பயிற்சியாளர் (சென்னை) கார்த்திக், அம்மா உணவகங்களில் பணியாற்றுபவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு தயாரித்தல், வளாகங்களை சுத்தமாக வைத்திருத்தல், சுவையான உணவு தயாரிக்கும் முறைகள், உணவுகள் பரிமாறும் முறைகள், மளிகை, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை பாதுகாப்பாக பராமரித்தல், கலப்பட பொருட்களை கண்டறிதல், சுகாதாரமான குடிநீர் வழங்குதல், தன் சுத்தம் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை வழங்கினார்.

