தொடர் கனமழையால் சிறுவாணி அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4.07 அடி உயர்ந்து, 38.87 அடியை எட்டியுள்ளது. இதனால் கோவையின் குடிநீர் ஆதாரங்களில் ஒன்றான சிறுவாணி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
கோவையின் முக்கிய குடிநீர் ஆதாரங்களாக சிறுவாணி, பில்லூர் அணைகள் உள்ளன. மொத்தம் 49.53 அடி நீர்த்தேக்க உயரம் கொண்ட சிறுவாணி அணையில், கடந்த தென்மேற்கு பருவமழைக் காலத்தில் எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால் நீர்மட்டம் சரிந்து வந்தது.
இந்நிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியதைத் தொடர்ந்து சிறுவாணி அணை மற்றும் அதன் அடிவார நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் அணையின் நீர்மட்டம் வேகமாக உயரத் தொடங்கியுள்ளது.
சிறுவாணி அணையில் அக். 17-ம் தேதி 16 மி.மீ., 19-ம் தேதி 95 மி.மீ., 22-ம் தேதி 20 மி.மீ., 23-ம் தேதி 47 மி.மீ., 24-ம் தேதி 22 மி.மீ. மழை பதிவானது. தொடர்ந்து, அக். 25-ம் தேதி 48 மி.மீ., இன்று (அக். 26) காலை நிலவரப்படி 95 மி.மீ. மழை பெய்துள்ளது. அணையின் அடிவாரப் பகுதியில் 54 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
குறிப்பாக, நேற்று பெய்த கனமழையின் காரணமாக அணையின் நீர்மட்டம் இன்று ஒரே நாளில் 4.07 அடி உயர்ந்து, 38.87 அடியாக உள்ளது. இன்று அணையிலிருந்து 56.80 எம்.எல்.டி. குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டது.
