நமக்காக பிரதமரே பிரச்சாரம் செய்கிறார், அவருக்கு கோடி நன்றிகள் – கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
கோவையில் இன்று மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்காக பிரதமரே பிரச்சாரம் செய்திருக்கிறார், எனவே அவருக்கு கோடி நன்றிகள் என கோவை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலகலப்பாக பேசினார்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் குன்னூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் ராஜு, கூடலூர் தொகுதி வேட்பாளர் திராவிட மணி, மேட்டுப்பாளையம் தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் என்.ஆர் கார்த்திகேயன், உதகை தொகுதி வேட்பாளர் ராமச்சந்திரன் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதி வேட்பாளர் சூரிய பிரகாஷ் ஆகியோரை ஆதரித்து பேசினார்.

பெண்கள் முன்னேற்றம்
முதலமைச்சர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் நீலகிரி மாவட்டத்திற்கும் கோவை மேட்டுப்பாளையம் பகுதிக்கும் வழங்கிய திட்டங்களை பற்றி பேசினார். இதைத்தொடர்ந்து பொதுவாக தமிழகத்தில் பெண்கள் முன்னேற்றத்திற்கு வழங்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் பற்றி விரிவாக பேசினார்.
அதிலும் குறிப்பாக புதுமைப் பெண் திட்டத்தை பற்றி உயர்வாக பேசினார்.

“பெண்களின் படிப்புக்கு பணம் ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டது புதுமைப்பெண் திட்டம். இத்திட்டம் வந்த பிறகு பெண்கள் கல்லூரியில் சேர்வது 34 % அதிகரித்துள்ளது. அதிலும் நிறைய பேர் கிராமப்புற பெண்கள்,” என கூறிய அவர், அடுத்த திமுக ஆட்சியில் இந்த திட்டத்தில் வழங்கப்படும் தொகை உயர்த்தப்பட்டு மாதம் ரூ.1500 வழங்கப்படும் எனக் கூறினார்.
“சமூகத்தில் சரி பாதி பெண்கள்தான் இருக்கிறார்கள். பெண்கள் வளராமல் தமிழ்நாடு வளராது. பெண்களின் வளர்ச்சியோடு அக்கறை வைத்தும் ஒட்டுமொத்த மாநிலத்தின் மேல் அக்கறை வைத்தும் இதை செய்கிறோம்,” என அவர் பெருமிதத்துடன் கூறினார்.
செந்தில் பாலாஜிக்கு கொடுக்கப்பட்ட டியூட்டி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கரூர் மக்கள் செந்தில் பாலாஜியை புறக்கணித்ததால் அவர் கோவை தெற்கு தொகுதிக்கு போட்டியிடுகிறார் என்று கூறியதற்கு பதில் அளித்த முதலமைச்சர் ஸ்டாலின், ” நான்தான் செந்தில் பாலாஜியை கோவைக்கு வர வைத்திருக்கிறேன். கரூரில் கழகத்தின் வெற்றி கன்ஃபார்ம், கோவையிலும் கழகத்தின் வெற்றியை கன்ஃபார்ம் செய்ய நான் தான் அவருக்கு டியூட்டி கொடுத்திருக்கிறேன்,” என்று கூறினார்.
“கோவையில் 2021 நடைபெற்றது இம்முறை நிச்சயமாக நடக்காது. கோவையில் முழுக்க இம்முறை நாமதான் ஜெயிப்போம் நம்ம மட்டும்தான் ஜெயிப்போம். உறுதியாக ஜெயிப்போம். கோவை உங்கள் (அதிமுக) கோட்டை என்று நினைப்பில் எப்போதோ ஓட்டையை போட்டு விட்டோம்,” என கலகலப்பாக பேசினார்.

பிரதமருக்கு கோடான கோடி நன்றி
இன்று கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி மகளிர் இட ஒதுக்கீட்டை திமுக நிறைவேற்ற விடாமல் தடுத்து விட்டது என்று பேசியதாக பகிர்ந்து கொண்ட அவர், அப்படியென்றால் இதற்கு முன்பு மகளிர் இட ஒதுக்கீடு சட்டத்தை 2023 ஆம் ஆண்டு நிறைவேற்றி விட்டோம் என்று பிரதமர் சொல்லியது எப்படி? என கேள்வி எழுப்பினார்.

2023 லேயே நிறைவேற்றி இருக்கும்போது நேற்று அவர்கள் நிறைவேற்ற நினைத்த சட்டத்திற்கும் மகளிர் இட ஒதுக்கீடுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? என்று மீண்டும் கேள்வி எழுப்பிய அவர் இதற்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பிரதமரே ஒப்புக் கொண்டு விட்டதாக தான் இது அமைந்திருக்கிறது என்று கூறினார்.
“இதற்கு மேல் எந்த விளக்கமும் கொடுக்க தேவையில்லாத அளவிற்கு அவர் (பிரதமர்) பேச்சு அமைந்துள்ளது. நன்றாக பிரச்சாரம் செய்த பிரதமருக்கு, நமக்காக பிரச்சாரம் செய்த பிரதமருக்கு கோடான கோடி நன்றிகள்,” என விமர்சித்தார்.
இனி எங்களை தடுக்க முடியாது
“திமுக ஆட்சியில் இருந்தால் என்ன செய்ய முடியும் என்பதை நேற்று பாராளுமன்றத்தில் நிரூபித்து காட்டி இருக்கிறோம்…1950, 60 காலங்களில் இருந்த திமுகவை திரும்ப வர வைத்து விட்டார்கள். இனி எங்களை யாராலும் தடுக்க முடியாது,” என முழங்கினார்.

“அடுத்த திமுக ஆட்சியில் எங்கள் சாதனையை நாங்களே முறியடிக்கும் அளவில் ஆட்சியை கொடுப்போம்,” என அவர் உறுதியளித்து, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

