தமிழ்நாட்டில் வரும் செவ்வாய்க்கிழமையுடன் தேர்தல் பரப்புரை நிறைவடையும் நிலையில், அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பரப்புரை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கோவை கொடிசியா மைதானத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இதில் கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் சிறப்புரை ஆற்றினார்.
பொதுக்கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன், கூட்டணி கட்சித் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில்: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து அரசியல் கட்சிகளிடம் தனிப்பட்ட முறையில் ஆதரவு கூறினேன். சாதாரண மகளிர் நாடாளுமன்றம் சட்டப்பேரவை வரவேண்டும் என்பதே எனது ஆசை. இந்த உயர்வான முயற்சி தோற்றது.
திமுக காங்கிரஸ் கூட்டாளிகள் வெறுப்ப அரசியலுக்காக அதை இரையாக்கினர். சாதாரண குடும்பத்து பெண்கள் எம்.பி.,க்கள் ஆவதில் திமுகவுக்கு விருப்பமில்லை. மிகத் தெளிவாக மறுத்தனர். பெண்களுக்கான வாய்ப்பை திமுக ஏன் மறுத்தது என கேளுங்கள். ஏப்ரல் 23 இல் அதற்கு தெளிவான பதில் அளியுங்கள்.
இன்று பெருமையாக சொல்லிக்கொள்ள திமுகவிடம் எந்த சாதனையும் இல்லை. திமுகவின் மோசமான நடவடிக்கையை மக்கள் பார்த்துக் கொண்டுள்ளனர். உங்களால் தப்ப முடியாது.
இது எங்கள் போராட்டத்தின் முடிவு அல்ல. தொடக்கம்தான். தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் உரிமைக்காக போராடும்.
இன்று தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் குற்றவாளிகளால் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் எந்த வயது பெண்களுக்கும் பாதுகாப்பில்லை.
ரூபாய் 14 லட்சம் கோடி நிதியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கி உள்ளது. இது காங்கிரஸ் அளித்த தொகையை விட அதிகம்.
திமுக குடும்பத்தின் சொத்துக்கள் அதிகரித்துள்ளது. மறுபுறம் தமிழக மக்களின் கடன் அதிகரித்துள்ளது.
அதிகாரம் தங்கள் குடும்பங்களுக்கு கிடைக்க வேண்டும் என ஒரு குடும்பக் கட்சி ஆசைப்படுகிறது. தமிழ்நாட்டை ஒரு குடும்பமே ஆட்சி செய்கிறது. முதல்வர், துணை முதல்வர், டெல்லி எம்பிக்கள், திரைத்துறை ,ஊடகம் ஒரு குடும்பத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.குடும்பத்தால் குடும்பத்துடன் குடும்பத்திற்காக என்பது திமுகவின் கொள்கை.
வன்முறை மற்றும் குற்றவாளிகளுக்கு ஆதரவாக இருந்து கொண்டு பெண்களுக்கு திமுக தீங்கு இளைக்கிறது. நாடாளுமன்றத்திலும் பெண்களுக்கு ஆதரவாக திமுக இருப்பதில்லை. பெண்களுக்கு எதிரான திமுகவின் நிலைப்பாட்டிற்கு தக்க பாடம் கிடைக்கும் என கூறினார்.
அரசியல் பின்புலம் இல்லாமல் நேர்மையால் உயர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் துணை குடியரசு தலைவராக உள்ளார் என்றும் புகழ்ந்தார்.
டபுள் எஞ்சின் அரசாங்கத்தில் வேலைகள், மக்கள் நலத்திட்டங்கள் வேகமாக செயல்படுகின்றன. தமிழகத்தில் டபுள் இன்ஜின் சர்க்கார் உருவாகி மாநிலத்தின் வளர்ச்சி மேலும் வேகப்படுத்தப்படும்.
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
