மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில், பில்லூர் அணைக்கு அருகே அமைந்துள்ள பரளிக்காடு பகுதி, காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் முக்கியமான சூழல் சுற்றுலா மையமாகும். இயற்கை எழில் சூழ்ந்த இந்த பகுதி, கோவை காந்திபுரத்தில் இருந்து சுமார் 70 கிலோமீட்டரும், காரமடையில் இருந்து 30 கிலோமீட்டரும் தொலைவில் அமைந்துள்ளது.

காரமடை வனத்துறை மற்றும் பழங்குடியின மக்களின் பங்களிப்புடன் நடைபெற்று வரும் இந்த சூழல் சுற்றுலா, சுற்றுலா பயணிகளிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. பொதுவாக சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டுமே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து கட்டணம் செலுத்த வேண்டும்.

பரளிக்காடு சூழல் சுற்றுலாவின் முக்கிய அம்சங்களாக பில்லூர் அணையில் பரிசல் பயணம், பழங்குடியின மக்களின் பாரம்பரிய உணவுகள், அத்திக்கடவு ஆற்றில் மூலிகை குளியல், வனப்பகுதியில் நடைப்பயணம் மற்றும் பழங்குடியினரின் கலாசார நடன நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. குறிப்பாக, 10-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் பாரம்பரிய உணவு வகைகள் சுற்றுலா பயணிகளுக்கு உண்ண தரப்படும்.

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் இயற்கை மற்றும் நீர்நிலைகள் அமைந்த பகுதிகளுக்கு அதிகம் சென்று வருகின்றனர். இதையடுத்து, மே 1 முதல் மே 31 வரை தினமும் பரளிக்காடு சூழல் சுற்றுலா இயக்கப்படும் என காரமடை வனச்சரகர் அறிவித்திருந்தார். இதனால், கோவை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தந்தனர்.

இந்நிலையில், கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரளிக்காடு சூழல் சுற்றுலா இந்த வாரம் முழுவதும் தற்காலிகமாக மூடப்படுவதாக காரமடை வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.